இருமுனை போரை எதிர்கொள்ளும் வகையில் இந்திய ராணுவம் தயார் ஆகி வருகிறது!!

 

    -MMH

     இந்திய ராணுவம் 15 நாட்கள் வரை தொடர்ந்து போரிடுவதற்கு தேவையான ஆயுதங்கள், வெடி பொருட்களை தயார் செய்து வருகிறது.  

லடாக் மட்டுமன்றி வடகிழக்கு எல்லைப் பகுதிகளிலும் சீன ராணுவம் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் காரணமாக இந்தியா - சீனா இடையிலான போர்ப் பதற்றம் நீறுபூத்த நெருப்பாக உள்ளது. காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவமும் அவ்வப்போது பீரங்கி தாக்குதலை நடத்தி வருகிறது.

இந்த பின்னணியில் இருமுனை போரை எதிர்கொள்ளும் வகையில் இந்திய ராணுவம் ஆயுதங்கள், வெடிபொருட்களை தயார் செய்து வருகிறது. இது குறித்து ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது:

"கடந்த 2016 செப்டம்பரில் காஷ்மீரின் உரி ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

அப்போதே இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் எழுந்தது. அன்றைய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், போர் அச்சுறுத்தலை எதிர்கொள்ள ராணுவம், கடற்படை தளபதிகளின் நிதி கையாளும் அதிகாரத்தை ரூ.500 கோடியாக அதிகரித்தார். இதேபோல விமானப் படை தளபதியின் நிதி அதிகாரத்தை ரூ.100 கோடியாக உயர்த்தினார்.

தற்போதைய சூழ்நிலையில் சீனா, பாகிஸ்தானுடன் ஒரே நேரத்தில் போர் மூண்டால், அதை எதிர்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை ராணுவம் மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக, 15 நாட்கள் வரை தொடர்ந்து போரிடுவதற்கு தேவையான ஆயுதங்கள், வெடிபொருட்களை தயார் செய்து வருகிறது. இதற்காக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுமார் ரூ.50,000 கோடி அளவுக்கு ஆயுதங்கள், வெடிபொருட்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன". இவ்வாறு ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

ட்ரோன் தடுப்பு சாதனம்: ட்ரோன் என்றழைக்கப்படும் சிறிய ரக ஆளில்லா தாக்குதல் விமானங்களை தயாரிப்பதில் சீனா முன்னோடியாக உள்ளது. இந்தியா - சீனா இடையே போர் மூண்டால் சீன ராணுவம் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தக் கூடும்.

இஸ்ரேல் ட்ரோன்: இதை சமாளிக்க இஸ்ரேல் நாட்டிடம் இருந்து 'ஸ்மாஷ் 2000' என்ற அதிநவீன ட்ரோன் தடுப்பு சாதனங்களை வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இரவிலும் ட்ரோன்களை துல்லியமாக சுட்டு வீழ்த்த முடியும். முதல் கட்டமாக இந்திய கடற்படை போர்க் கப்பல்களில், 'ஸ்மாஷ் 2000 சாதனங்கள்' பொருத்தப்பட உள்ளதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

-சுரேந்தர்.

Comments