பொதுமக்களே ஊழல்வாதிகளாக மாறிவிட்டனர்! - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வேதனை..!!!

-MMH

பொதுமக்களே ஊழல்வாதிகளாக மாறிவிட்டனர் என உயர் நீதிமன்ற மதுரை கிளை வேதனை தெரிவித்துள்ளது. வழக்கறிஞர் ரத்தினம் என்பவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'விவசாயத்துறை அமைச்சர் துரைக்கண்ணு கடந்த அக்டோபர் 31ஆம் தேதி கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். 

இதையடுத்து கும்பகோணத்தில் துரைக்கண்ணுவின் ஆதரவாளர்கள் வீடுகளில் போலீசார் சோதனை நடத்திப் பல கோடி ரூபாய் பணத்தைக் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது. சுமார் 800 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இது சட்டப்பேரவை தேர்தலின்போது வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக அதிமுக தலைமையால் கொடுத்து வைக்கப்பட்டிருந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

எனவே, சட்டப்பேரவைத் தேர்தலின்போது வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக அதிமுக தலைமை, கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் ஒவ்வொரு தொகுதியிலும் கோடிக்கணக்கான ரூபாயைப் பதுக்கி வைத்திருப்பதாகத் தெரிகிறது. எனவே, அதிமுகவினர் பதுக்கியதாகக் கூறப்படும் 800 கோடி ரூபாய் தொடர்பாகவும், இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்தும் தேர்தல் ஆணையம், மத்திய அரசு, தமிழக அரசு ஆகியவை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்' என மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்த மனு, நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'வாக்காளர்கள் ஓட்டுக்குப் பேரம் பேசி பணம் வாங்குகின்றனர். பொதுமக்களே ஊழல் வாதிகளாக மாறிவிட்டனர்' என்று நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

'ஒவ்வொரு தொகுதியிலும் அரசியல்வாதிகள் 50 முதல் 60 கோடி ரூபாய் வரை சட்டவிரோதமாகத் தேர்தலுக்குச் செலவு செய்கின்றனர்' என்று குறிப்பிட்ட நீதிபதிகள், 'வருமான வரித் துறைக்குத் தெரிந்தே இது நடைபெறுகிறது. அனைவரிடமிருந்தும் மாற்றம் தொடங்க வேண்டும்' என்றும் குறிப்பிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

-பாரூக்,சிவகங்கை.

Comments