கொரோனா: மறுபடியும் மொதல்ல இருந்தா? இங்கிலாந்திலிருந்து சென்னை வந்த நபருக்கு கொரோனா!
பிரிட்டனில் இருந்து தலைநகர் டெல்லி வழியாக சென்னை வந்த நபர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து உலக மக்களை அச்சத்தில் ஆழ்த்திய கொரோனா வைரசின் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருவதாக கருதி, கடந்த ஆறு மாதங்களாக பல்வேறு பொதுமுடக்க தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன.
இந்த நிலையில், பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாகவும், இது பழைய கொரோனாவை விட மிகவும் வேகமாக பரவக்கூடியது என்றும் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, பிரிட்டன் உடனான விமான போக்குவரத்து சேவை இன்று (டிசம்பர் 22) முதல் 31ஆம் தேதி வரை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதனிடையே, லண்டனில் இருந்து தலைநகர் டெல்லி வழியாக இன்று அதிகாலை சென்னை வந்த விமானப் பயணிகளை சுகாதாரத் துறை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். அதில் ஒரு நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உடனே அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவருக்கு புதிய வகை கொரோனா பரவியுள்ளதா என்பதை கண்டறிய பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.
கொரோனா உறுதி செய்யப்பட்ட நபருடன் பயணித்த பிற பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-பாரூக்.
Comments