இப்படி ஒரு வியாதியா? - உங்களுக்கு "இரிட்டபிள் பவுல் சிண்ட்ரோம்" பற்றி தெரியுமா?

     -MMH

சிறு வயதில் ஞாயிறு மாலைகளில், மறுநாள் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் மனதைப் பிசையும். காலை உணவை உண்டதும் கழிப்பறைக்கு ஓடுவார்கள் குழந்தைகள். நம்மில் பெரும்பாலானோர் இந்த இம்சையை அனுபவித்திருப்போம். சிலருக்கு, பெரியவர்கள் ஆன பிறகும் இது தொடரும். 

இம்சையான உணர்வு அல்லது மெல்லிய வயிற்று வலியுடன் வயிற்றுப் போக்காக அல்லது மலச்சிக்கலாக உருவாகும் இந்த வாதை, சாப்பிட்டதும் மலம் கழித்தால் தான் நிம்மதியாக இருக்க விடும். இது, எப்போதாவது ஒருமுறை என்றால் கவலைப்படத் தேவை இல்லை. ஒரு நாளைக்கு எத்தனை முறை சாப்பிட்டாலும் உடனடியாகக் கழிப்பறைக்குச் செல்ல வேண்டிய நிலை பல நாட்களுக்குத் தொடர்ந்தால், இந்தப் பிரச்னையாகவும் இருக்கலாம்...

‘மொத்த மக்கள்தொகையில் 15 சதவிகிதம் பேர் இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர்’ என்கிறார்கள். சிலர், உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி என டாக்டர் பரிந்துரைத்த படி வாழ்ந்து இந்தப் பிரச்னையின் தீவிரத்தைக் குறைத்துக் கொள்கின்றனர். மாதக் கணக்கில், வருடக் கணக்கில் இந்தப் பிரச்னை இருந்தாலும், திடீரென பெரிய பிரச்னைகளை ஏற்படுத்தாததால் பெரும்பாலானோர் மருத்துவரை நாடாமல், இந்த அவஸ்தையோடு வாழப் பழகிக் கொள்கிறார்கள்.

மன அழுத்தமற்ற வாழ்க்கைச் சூழலில் இருக்கும் வரை இதனால் பெரிய பாதிப்புகள் இருக்காது. ஆனால், பணிச்சுமை, தனிப்பட்ட சிக்கல்கள் போன்ற நெருக்கடியான சூழ்நிலைகளில் சிக்கிக் கொள்ளும் போது துவளச் செய்துவிடும். பணியிடம் உட்பட வேறு எங்கும் செல்ல விடாமல் வீட்டிலேயே முடக்கி, அன்றாட வேலைகளைக் கூட சரிவரச் செய்ய விடாமல், வாழ்வையே புரட்டிப் போடும் சிக்கலாக இந்த வலி மாறக்கூடும்.

ஐபிஎஸ் ஏன் வருகிறது?

இரைப்பை, பெருங்குடல் மற்றும் சிறுகுடல்களின் சீரான இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் அல்லது தடங்கல்களால் இந்தப் பிரச்னை வருகிறது. வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகள் விரைந்து செயல்படுவதால் ‘ஐபிஎஸ்-டி’ (IBS-D) எனப்படும் வயிற்றுப் போக்கும், இயல்புக்கும் குறைவான வேகத்தில் செயல் படுவதால் ‘ஐபிஎஸ்-சி’ (IBS-C) எனப்படும் மலச்சிக்கலும் வருகின்றன. செரிமானப் பாதைகளில் ஏற்படும் தொற்று, மூளைக்கும் செரிமான மண்டலத்துக்குமான தொடர்பில் குளறுபடி, மன அழுத்தம் மற்றும் மனப் பதற்றம் காரணமாகவும் இந்த பாதிப்பு ஏற்படலாம்.

இரிட்டபிள் பவுல் சிண்ட்ரோம் அறிகுறிகள்..

வயிற்று வலி, வயிற்று உப்புசம், உணவு உண்டவுடன் மலம் கழிக்க வேண்டும் எனும் உணர்வு, வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல், சிலருக்கு தொடர்ந்து சில நாட்களுக்கு மலச்சிக்கலும், பிறகு தொடர்ந்து சில நாட்களுக்கு வயிற்றுப் போக்கும் மாறி மாறி ஏற்படும்.

எச்சரிக்கையாக இருக்க வேண்டியவர்கள்..

இரிட்டபிள் பவுல் சிண்ட்ரோம் ஆபத்து இல்லாத தொந்தரவு மட்டுமே. பின் வரும் பாதிப்பு உள்ளவர்கள், மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்... அவசரம். ஆரம்ப நிலையிலேயே மருத்துவ ஆலோசனை பெறுவதன் மூலம் பெரிய பாதிப்பில் இருந்து தப்பலாம்.

- 50 வயதுக்கு மேல் புதிதாக ஆரம்பித்த ஐபிஎஸ் வகை குடல் உபாதைகள் உடையவர்கள்.

- எடை குறைப்பில் ஈடுபடாமல் தானாகவே உடல் எடை குறைபவர்கள்.

- மலம் கழிக்கும் போது ரத்தம் கலந்து செல்லும் பிரச்னை உடையவர்கள்.

- தூக்கத்தைக் கெடுத்து எழுப்பும் வயிற்றுப் போக்கு, வலி உபாதைகள் உடையவர்கள்.

- குடல் புற்றுநோய் உள்ளவர்கள்... குறிப்பாக, 50 வயதுக்கு முன்பாகவே பாதிப்பு உடையவர்களின் நெருக்கமான குடும்ப உறவினர்கள் ரத்தசோகை உடையவர்கள்.

தீர்வு என்ன?

நார்ச்சத்து மற்றும் ஆன்டிடயோரியல் மருந்துகள்: பாதிக்கப்பட்டவரின் உடல் நிலைக்கு ஏற்ப நார்ச்சத்து மற்றும் மருந்துகள் பரிந்துரைக்கப்படும். உணவில் திடீரென நார்ச்சத்தை அதிகமாக்குவதும் பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே, கொஞ்சம் கொஞ்சமாக நார்ச்சத்தை அதிகரிப்பதன் மூலம் இந்த பாதிப்பில் இருந்து தப்பலாம். மலச்சிக்கல், வயிற்றுப் போக்குப் பிரச்னைகளுக்கான மருந்துகளும் பரிந்துரைக்கப்படும்.

ப்ரீபயாடிக்ஸ் (Prebiotics): ‘ப்ரீபயாடிக்ஸ்’ என்பவை செரிமானமாகாத உணவு வகையைச் சார்ந்தவை. காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்கள் நிறைந்த முழு தானியங்கள், தண்ணீர் விட்டான் கிழங்கு, வெங்காயம், வாழைப் பழம் போன்றவை வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாவைப் வளர்க்கின்றன. புரோபயோடிக்ஸ் மற்றும் ப்ரீபயோடிக்ஸ் இரண்டும் இணைந்து மலச்சிக்கல் பிரச்னைக்கு நல்ல தீர்வைத் தரும்.

ஆன்டிபயாடிக்ஸ் (Antibiotics): சிறு குடலில் உள்ள பாக்டீரியாவின் அதிக வளர்ச்சி காரணமாகவோ, குறிப்பிட்ட சில பாக்டீரியா காரணமாகவோ ஐபிஎஸ் ஏற்படக் கூடும். அப்படிப்பட்ட பிரச்னை உள்ளவர்களுக்கு ஆன்டிபயாடிக் மருந்து பரிந்துரைக்கப்படும். இது, அளவுக்கு அதிகமான பாக்டீரியா வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும்.

உடற்பயிற்சி: சைக்கிளிங், ஜாகிங் போன்றவை ஐபிஎஸ் பிரச்னையைக் கணிசமாகக் குறைக்கின்றன. கொழுப்பைக் கரைப்பதோடு வயிற்றுத் தசைகளைச் சிறப்பாக செயல்பட வைத்து, செரிமானப் பாதை வழியாக வாயுக்களைச் சீராக வெளியேற்றி, வயிற்றைப் பாதுக்கின்றன. தினசரி 20 நிமிடங்களிலிருந்து 60 நிமிடங்களாக உடற்பயிற்சி செய்யும் நேரத்தை உயர்த்தி, வாரத்துக்கு மூன்று முறையிலிருந்து ஐந்து முறையாகச் செய்யும் போது, குறிப்பிடத்தக்க ஆரோக்கியமான மாற்றங்கள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

புரோபயாடிக்ஸ் (Probiotics): புரோபயாடிக்ஸ் இயற்கையான, நல்ல பாக்டீரியா உற்பத்தியைப் பெருக்கி வயிற்று மண்டலத்தின் (Gut flora) சமச்சீரான இயக்கத்துக்கு உதவுகின்றன. உணவு அல்லாத பிற புரோபயாடிக் சப்ளிமென்ட்டுகள் மூலமாக இந்தப் பிரச்னைக்கு என்ன தீர்வு என்பதைப் பற்றியே பெரும்பாலான ஆய்வுகள் நடந்து வருகின்றன. புரோபயோடிக் சப்ளிமென்ட் வயிற்று வலி மற்றும் குடல் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உணவில் கவனம்: உணவில் நார்ச்சத்து அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். காரசாரமான மசாலாப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் ஜங்க் ஃபுட்ஸையும் தவிர்க்க வேண்டும். முழு தானியங்கள், காய்கறிகள், பழங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். தேநீர், காபி குடிப்பதைத் தவிர்ப்பதோ, இயன்றவரை குறைத்துக் கொள்வதோ நல்லது.

நமது உடலின் அறிகுறிகளைக் கவனிக்க வேண்டும். நாம் உண்ணும் உணவையும் அதன் விளைவுகளையும் நுட்பமாகக் கவனித்துக் குறித்துக் கொள்ள வேண்டும். இப்படிச் செய்தால், நம் உடலுக்கு எது நல்லது, எது கெட்டது என்பதை விரைவில் கண்டறிந்து, கேடு விளைவிப்பவற்றைத் தவிர்ப்பதன் மூலம் இந்த பிரச்னையில் இருந்து விடுதலை பெறலாம்.

- ராயல் ஹமீது, சிங்கம்புணரி.

Comments