தேவகோட்டை இளைஞருக்கு கடன் தொல்லை! விபரீத முடிவு!!

 

-MMH

தேவகோட்டை சேர்ந்த இளைஞர் கடன் தொல்லையால் பூச்சி மருந்து குடித்தும், கழுத்தை அறுத்தும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை, அழகாபுரி நகர், வடக்குத் தெருவை சேர்ந்த மணி என்பவர் மகன் வீரசிங்கம். 27 வயதான இவர் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், தேவகோட்டையிலிருந்து கிளம்பி திருப்பத்தூர் அருகே உள்ள கருப்பூர் கண்மாய் பகுதிகளில் பயிர்களுக்குத் தெளிக்கும் குருணை மருந்து எனப்படும் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து விட்டு, பீர் பாட்டிலால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

கண்மாய் பகுதிக்கு கால்நடை மேய்க்க சென்றவர்கள் முனகல் சத்தம் கேட்டு, அவ்வழியாகச் சென்று பார்க்கையில் கண்மாய் பகுதியில் உயிருக்கு போராடிய நிலையில் துடிதுடித்துக் கொண்டிருந்த வீரசிங்கத்தை பார்த்துவிட்டனர். அப்போது ரணசிங்கபுரம் பகுதியில் வாகன சோதனை செய்து கொண்டிருந்த, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சேவுக வீரையாவிடம் தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பேரில் அப்பகுதிக்கு விரைந்து சென்று சிறப்பு ஆய்வாளர் சேவுக வீரையா உள்ளிட்ட போலீசார், உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைத்து வீரசிங்கத்தை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்பு வீரசிங்கத்திற்கு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை செய்யப்பட்டு பின்பு மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் போலீசார் விசாரணையில் ஈடுபட்டதில் தேவகோட்டை நகர காவல்நிலையத்தில் வீரசிங்கத்தை காணவில்லை என அவரது சகோதரி புகார் அளித்துள்ளது தெரியவந்தது.

வீரசிங்கம் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாகவும், அதனால் சொந்த ஊரிலிருந்து வெளியேறியதாகவும் கூறப்படுகின்றது, இரண்டு நாட்களாக குடும்பத்தார் வீரசிங்கத்தை தேடி வந்த நிலையில் விஷமருந்தி கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தேவகோட்டை பகுதியில் பரபரப்பானது.

-சங்கர், தேவகோட்டை.

Comments