வேளாண் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுத்தி, மேலூரில் முஸ்லிம்கள் கண்டனப் பேரணி!!

 

     -MMH

    மேலூர்: டிச - 12.

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதைத் திரும்ப பெற வலியுறுத்தியும் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் முகாமிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளும், சாலைமறியல், கடையடைப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி, தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் மதுரை மாவட்டம், மேலூரில் முஸ்லிம் ஜமாத்தார்கள் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, கண்டனப் பேரணியை நடத்தினர். நேற்று வெள்ளிக்கிழமை, பள்ளிவாசல்களில் ஜூம்மா என்ற சிறப்பு தொழுகை முடிந்த பிறகு, அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பெரிய பள்ளிவாசல் நோக்கி, முஸ்லிம்கள் வந்து குவியத் தொடங்கினர். பின்னர் அங்கிருந்து பேருந்து நிலையம் வரை கோசங்கள் எழுப்பியவாறு பேரணியாக வந்தனர்.

இஸ்லாமியர்கள் நடத்திய பேரணிக்கு பெரியபள்ளிவாசல் ஜமாஅத் தலைவர், ஹாஜி. சேக்தாவுது தலைமை தாங்கினார். இறுதியில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கலந்து கொண்டு பேசினார். 

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், மூன்று வேளாண் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றைத் திரும்பப் பெறும்வரை போராட்டம் ஓயாது எனவும் ஆவேசமாகத் தெரிவித்தார்.

- பாரூக், சிவகங்கை.

Comments