கம்பம் புத்தக கண்காட்சியில் வாசகர்களை வரவேற்ற பாரதியார்!!

 -MMH

கம்பம்: தேனி மாவட்டம், கம்பத்தில் நடைபெற்ற புத்தக கண்காட்சியில் பாரதியார் வேடமிட்ட இளைஞர் வாசகர்களை வரவேற்றது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தேனி மாவட்டம், கம்பம் அரசமரம் அருகில் ஞாயிற்றுக்கிழமை பாரதி தமிழ் இலக்கியப் பேரவை மற்றும் நூலக வாசகர் வட்டம் சார்பில் மூன்றாவது ஆண்டாக புத்தக கண்காட்சி நடைபெற்றது. 

கண்காட்சியில் பல்வேறு வகையான புத்தகங்கள் பழங்கால ஓலைச்சுவடிகள் வைக்கப்பட்டிருந்தன. புத்தக கண்காட்சியின் நுழைவாயிலில் பாரதியார் வேடமிட்ட இளைஞர் கண்காட்சிக்கு வருகை தரும் வாசகர்களின் பொதுமக்களை வரவேற்றார். மேலும் வெண்கொற்றக் குடையின் கீழ் பாரதியார் அமர்ந்து வரவேற்றார்.

புத்தக கண்காட்சியில் ஏராளமான பொதுமக்கள் வாசகர்கள் கலந்து கொண்டு புத்தகங்களை வாங்கிச் சென்றனர். இதுபற்றி பாரதி தமிழ் இலக்கியப் பேரவை நிறுவனத் தலைவர் கவிஞர் சோ.பாரதன் கூறுகையில், பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு 3 ஆவது ஆண்டாக புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது.

கண்காட்சியில் புத்தகங்கள் வாங்கும் பொதுமக்களுக்கு 30 சதவீதம் தள்ளுபடி விலையில் புத்தகங்கள் வழங்கப்படுகிறது என்றார். புத்தக கண்காட்சியில் பாரதியார் வேடத்தில் இளைஞர் அமர்ந்திருந்தது பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சாலையில் நடந்து சென்றவர்கள் பாரதியார் வேடமிட்ட இளைஞருடன் செல்லிடப்பேசி மூலமாக புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஆசிக், தேனி. 

Comments