இரு தரப்பினருக்கு இடையே மோதல்!! - விஸ்வரூபம் எடுக்கும் முன் தடுத்த காவல்துறையினர்!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை ஒன்றியத்திற்குட்பட்ட மாரப்ப கவுண்டன் புதூர் அடுத்த எம்ஜிஆர் புதூரில் நேற்று இரவு இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மோதல் விஸ்வரூபம் எடுக்கும் நேரத்துக்குள் ஆனைமலை காவல்துறையினர் விரைந்து வந்து தடுத்தனர். மேலும் மோதலில் ஈடுபட்ட நபர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மீண்டும் மோதல் ஏற்படாமல் இருக்க இரவு பகலாக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மோதலுக்கான காரணம் என்னவென்று அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் கேட்டபோது, "எங்கள் பகுதியில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்று வந்த நிலையில் நேற்று அனைவரும் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த பொழுது எதிர்பாராதவிதமாக இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது." என்றார்கள்.
மேலும் ஒரு சிலர், எங்கள் பகுதியில் கள்ளச்சந்தையில் மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இதனால் குடிமகன்கள் குறைய குறைய குடித்துக்கொண்டு ஆடல் பாடல் நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருந்தனர். அப்பொழுது சின்ன சின்ன பிரச்சனைகள் வந்துகொண்டிருந்தன. பின்பு பெரிய பிரச்சினையாக உருமாறி இரு தரப்பினருக்கு மோதல் ஏற்பட்டதாக தெரிவித்தனர். மேலும் இப்பகுதி உள்ள சமூக ஆர்வலர்கள் கூறுகையில் இந்த இரு தரப்பினருக்கு ஏற்பட்ட மோதலுக்கு முக்கிய காரணம் எங்கள் பகுதியில் கள்ளச்சந்தையில் மது விற்பனை மற்றும் ஆடல் பாடல் நிகழ்ச்சி என்று தெரிவித்தனர்.
இருதரப்பு மோதலுக்குப் பிறகு இரவோடு இரவாக ஆடல் பாடல் நிகழ்ச்சி குழுவினர் இடத்தை காலி செய்து விட்டனர். மேலும் கள்ளச்சந்தையில் நடைபெற்ற மது விற்பனை உடனடியாக நிறுத்தப்பட்டு மதுபாட்டில்களை அப்புறப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-M.சுரேஷ்குமார், கோவை தெற்கு.
Comments