சீனாவுடன் ஒப்பிடும் போது இந்திய ராணுவத் திறன் மிகச் சிறப்பு!! -

    -MMH

     இந்திய இராணுவத்தில் 12 இலட்சம் இராணுவ வீரர்கள் உள்ளனர். இதில் முக்கிய சிறப்பு என்னவெனில் 12 பிரிவுகளில் 2,00,000 க்கும் மேற்பட்ட வீரர்களை உயரமான மலைப்பகுதிகளில் பணியாற்றுகிறார்கள் என்பதுதான்.

இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு கென்னடி பள்ளியின் அறிவியல் மற்றும் சர்வதேச பெல்பர் மையம் இந்திய ராணுவத் திறன் குறித்து ஆய்வு செய்து கூறுகையில் "ராணுவ கட்டமைப்பு, தளவாடங்கள், விமானங்கள், கப்பல்கள் என்ற ஒட்டு மொத்த கணக்கீட்டில் சீனா இந்தியாவைவிட எண்ணிக்கையில் கூடுதல் பலம் பெற்றதாக உள்ளது, என்றாலும் மலைப்பகுதிகளில் இந்தியாவின் திறன் மற்றும் வலிமை, அனுபவம் மிக சிறப்பாக உள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் போரில் வெற்றி என்பது வீரர்கள், ஆயுதங்களின் எண்ணிக்கையில் மட்டும் கிடைத்து விடுவதில்லை. மாறாக களத்தில் செயல்படும் திறனின் அடிப்படையில் அமைந்து உள்ளது.

அதன்படி சீனாவுடன் ஒப்பிடும் போது இந்தியாவின் திறன் மிக சிறப்பாக உள்ளது என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அதேபோல நவீன ஆயுதம் இதழின் மூத்த ஆசிரியரும் சீன நிபுணருமான ஹுவாங் குயோஜி எழுதிய கட்டுரை ஒன்றில் அவர் கூறுகையில் " தற்போது, பீடபூமி மற்றும் மலை பிரதேசங்களில் உலகின் மிகப்பெரிய மற்றும் அனுபவம் வாய்ந்த நாடு இந்தியா தான், அமெரிக்காவோ, ரஷ்யாவோ,சீனாவோ அல்லது எந்த ஐரோப்பிய நாடும் அல்ல எனக் குறிப்பிட்டு இருந்தார்.

இந்திய இராணுவத்தின் மலை யுத்த வலிமையின் பிரதான எடுத்துக்காட்டுகளில் ஒன்று, உலகின் மிக உயர்ந்த போர்க்களமான சியாச்சின் பனிப்பாறை ஆகும், இது கடல் மட்டத்திலிருந்து 5,000 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் உள்ளது மற்றும் வெப்பநிலை மைனஸ் 60 டிகிரி வரை குறைகிறது .

சியாச்சினில் கடல் மட்டத்திலிருந்து 6,749 மீட்டர் உயரத்தில் மிக உயர்ந்த பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள இப்பிரதேசத்தில் சுமார் 6,000 முதல் 7,000 வீரர்கள் எதையும் தாக்குப்பிடிக்கும் திறனுடன் உள்ளனர்.

மேலும், இந்திய இராணுவம் ஜம்மு-காஷ்மீரில் குல்மார்க்கிற்கு அருகில் ஒரு உயர் மலைபயிற்சி போர்ப் பள்ளியையும் கொண்டுள்ளது, இது அதன் உயரடுக்கு மற்றும் சிறப்பு பயிற்சிக்காக உலகம் முழுவதும் மிகவும் மதிக்கப்படுகிறது.

அதேபோல ஜம்மு-காஷ்மீரில் கார்கில் மாவட்டத்தின் டிராஸ் துறையில் இந்திய இராணுவம் ஒரு கார்கில் போர் பள்ளியை அமைத்துள்ளது, இது மலைப் போரில் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கிறது.

எனவே கடுங்குளிரிலும், மிகவும் ஆக்சிஜன் குறைவான பகுதிகளிலும் இந்திய வீரர்கள் மிகுந்த திறன் உள்ளவர்களாக உள்ளனர் என ஹுவாங் குயோஜி அக்கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். அதனால்தான் பாகிஸ்தானை இதுவரை 3 முறை இந்தியா மிக சுலபமாக வீழ்த்தியுள்ளது என்றார்.

இந்நிலையில், சீனாவின் குளோபல் டைம்ஸ் நாள் இதழ் சமீபத்தில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளது. அதில் நான்காயிரம் மீட்டர் உயரத்துக்கும் மேல் உள்ள பகுதிகளில் சீன ராணுவ அதிகாரிகளும் வீரர்களும் நாள்தோறும் ஒருமணிநேரம் சிறப்பு ஆக்சிஜன் சிலிண்டர்களை சுவாசிக்கிறார்கள் என்றும், செயற்கை ஆக்சிஜன் காற்று இல்லாமல் அவர்களால் அங்கு தினசரி பணிகளை மேற்கொள்வது கடினம் என்றும் கூறியுள்ளது.

தினமும் அவர்கள் உயரமான அந்த மலைப் பகுதிகளில் தினமும் செயற்கை ஆக்சிஜன் சுவாசிப்பதை அன்றாட வேலை திட்டத்தில் வைத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு காரணம் சீனர்களின் இயல்பான உடல்நிலையும், மேலும் உயரமான மலைப் பகுதிகளில் நிலவும் சூழலுக்கு அவர்கள் நீண்ட காலம் பழகியவர்கள் அல்ல என்றும் அந்த வீடியோ செய்தி குறிப்பிட்டுள்ளது.

ஒருவேளை சண்டை மூண்டுவிட்டால் போர்களங்களுக்கு சீன வீரர்கள் ஆக்சிஜன் சிலிண்டர்களை எப்போதும் சுமப்பார்களா அல்லது சண்டைக்கு நடுவே அவ்வப்போது ஒருமணிநேரம் ஏசி சேம்பருக்கு சென்று காற்றை சுவாசித்துவிட்டுதான் வருவார்களா என அந்த வீடியோ நையாண்டிசெய்துள்ளது.

அதே சமயம் இந்தியா மிகவும் உயரமான லடாக் உச்சியில் 4,500 மீட்டர் உயரத்தில் எஸ்.பி.ஐ வங்கியை இயக்கி வருகிறது. அங்கு நாள்தோறும் உணவு இடைவேளைதான் விடப்படுகிறது என்றும் அந்த வீடியோ செய்தி இந்தியாவின் மலை யுத்த திறனை சுட்டிக் காட்டி பாராட்டியுள்ளது.

-சுரேந்தர்.

Comments