கொத்து கொத்தாக மயங்கி விழும் மக்கள்.. ஆந்திராவில் பரவும் மர்ம நோய்.. காரணம் என்ன? ஆய்வில் புது தகவல்!


     -MMH

    விஜயவாடா: ஆந்திர மாநிலத்தில் மர்ம நோயால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தத்தில் காரியம் மற்றும் நிக்கல் ஆகிய வேதிப்பொருட்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் எலுரு என்ற ஒரு பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கடந்த 4ஆம் தேதி முதல் மர்ம நோயால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். வலிப்பு நோய் ஏற்பட்டது போன்ற அறிகுறிகள் அவர்களுக்கு தென்படுகிறது. விசித்திரமாக கூச்சலிட்டுக் கொண்டே அவர்கள் மயங்கி சாய்வதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது.

நோயாளிகள்: இதுவரை சுமார் 570 பேர், வாந்தி, மயக்கம் போன்ற அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அதில் 332 பேர் சிகிச்சைக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர். இந்த நோய்க்கான காரணம் என்ன என்பதை அறிவதற்காக அந்த பகுதியில் உள்ள தண்ணீர் பரிசோதிக்கப்பட்டது. அதில் மாசு கலக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

மருத்துவ குழுக்கள்: ஏன் இது போன்ற நோய் பரவுகிறது என்பதை அறிந்து கொள்வதற்காக உலக சுகாதார அமைப்பின் மருத்துவ குழு, புனே தேசிய வைராலஜி இன்ஸ்டியூட் போன்றவற்றை சேர்ந்த குழுக்கள் ஆந்திராவில் ஆய்வு செய்கின்றன. நோயாளிகளின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட ரத்தத்தில், அளவுக்கதிகமான காரியம் மற்றும் நிக்கல் ஆகிய வேதிப்பொருட்கள் இருப்பது தெரிய வந்துள்ளது

நோய் அறிகுறிகள்: இந்த வேதிப்பொருட்கள், இவர்கள் உடலில் எவ்வாறு கலந்தது என்பது பற்றி ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சுமார் மூன்று முதல் ஐந்து நிமிட நேரத்துக்கு வலிப்பு, பதற்றம், வாந்தி, தலைவலி, முதுகு வலி போன்ற அறிகுறிகள் இந்த நோயாளிகளுக்கு ஏற்படுகின்றன.

ரத்த வேதிப் பொருள்தான் காரணம்: 45 வயதாகும் ஸ்ரீதர் என்பவர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். மற்றவர்கள் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியுள்ளனர். சிலர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நோயாளிகளுக்கு எடுக்கப்பட்ட மூளை சிடி ஸ்கேன் ரிப்போர்ட் நார்மல் என்று வந்துள்ளது. எனவே இரத்தத்தில் கலந்துள்ள இந்த வேதிப்பொருட்கள் அளவு காரணமாகத்தான் இந்த மாற்றங்கள் இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-V.ருக்மாங்கதன், சென்னை.

Comments