ஆந்திர மாநிலத்தில் வேகமாக பரவும் விநோத நோய்! - அச்சத்தில் மக்கள்!!

 

     -MMH

     திருமலை: கிழக்கு கோதாவரியில் வேகமாக பரவும் விநோத நோயால் விசித்திரமான குரல்களில் மக்கள் அலறுகின்றனர். இந்த நோயால் 3 நாட்களில் 349 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒருவர் பலியானார்.

ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஏலூரில் கிழக்குவீதி, கொத்த பேட்டா, கொள்ளக்கூடா, மேற்கு வீதி, சனிவாரம் பேட்டா போன்ற பகுதிகளில் கடந்த 5ம் தேதி முதல் மக்கள் சாலையில் திடீரென மயங்கி விழுகின்றனர். இவ்வாறு மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள் வலிப்பு நோயுடன், நுரை நுரையாக வாந்தி எடுக்கின்றனர். அதோடு விசித்திர குரலை எழுப்பி அலறுகின்றனர். இதனால் மருத்துவமனையில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்த விநோத நோய் வேகமாக பரவி வருவதால், மக்கள் பீதியடைந்துள்ளனர். நேற்று முன்தினம் ஒரேநாளில் 150க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். கடந்த 5ம் தேதி முதல் நேற்று காலை வரை 3 நாட்களில் மொத்தம் 349 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் 40 பேர் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழந்தார். நேற்றைய நிலவரப்படி 150 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 9 பேர் மேல்சிசிச்சைக்காக விஜயவாடா மற்றும் குண்டூர் அரசு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர். குடிநீரில் மாசு கலந்ததால் மர்ம நோய் பரவுகிறதா? காற்று மாசு காரணமா? என்பது உள்ளிட்ட கோணங்களில் ஆய்வுகள் நடந்து வருகிறது.

கோதாவரி மாவட்டத்தில் வேகமாக பரவும் மர்ம நோயால், ஏலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மாநில முதல்வர் ஜெகன்மோகன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது, 'விரைவில் குணமடைய போதிய சிகிச்சை வழங்கப்படும். அனைவரும் தைரியமாக இருக்க வேண்டும்' என்று ஆறுதல் கூறினார். அதோடு பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு தேவையான உதவிகளை அளிக்க வேண்டும். நோய்க்கான காரணத்தை விரைவில் கண்டுபிடித்து குணப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை டெல்லி எய்ம்ஸ் மருத்துவ குழுவினர் பார்வையிட்டனர். மேலும், அவர்களது ரத்த மாதிரிகளை ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர். அதன் முடிவுகள் விரைவில் வெளிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-சுரேந்தர்.

Comments