கணவரின் பணத்தை எடுத்து பேஸ்புக் நண்பருக்கு கொடுத்த மனைவி கைது!!


     -MMH

     சென்னை: சென்னை மந்தைவெளி பெரியப்பள்ளி தெருவை சேர்ந்தவர் தமீம் அன்சாரி (40). தொழிலதிபரான இவர், வண்ணாரப்பேட்டையில் துணி வியாபாரம் செய்து வருகிறார். கடந்த மாதம் 20ம் தேதி வீட்டின் பூட்டு, பீரோ உடைக்கப்படாமல் வீட்டில் வைத்திருந்த 44 லட்சம் பணம் மட்டும் மாயமாகி இருந்தது. இதுகுறித்து தமீம் பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து புகார் அளித்த தொழிலதிபர் தமீம் மற்றும் அவரது மனைவி தஸ்நீம் (36) ஆகியோரை அழைத்து விசாரணை நடத்தினர். இருவரும் பணம் எடுக்க வில்லை என்று ஒருவர் மீது ஒருவர் புகார் தெரிவித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் இருவரின் செல்போன் கால் லிஸ்டை எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது தஸ்நீம் ஒரே எண்ணுக்கு அடிக்கடி பேசியது தெரியவந்தது.

அதன்படி தொழிலதிபர் மனைவி பேசிய நபரின் செல்போன் எண்ணை வைத்து நேற்று முன்தினம் புரசைவாக்கத்தை சேர்ந்த ரியாஸ் அகமது (38) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது ரியாஸ் அகமது தொழிலதிபர் மனைவியின் பேஸ்புக் நண்பர் என்றும், வீட்டில் பணத்தை திருடி தஸ்நீம் கொடுத்ததாக தெரிவித்தார். அதை தொடர்ந்து போலீசார் பணத்தை திருடியதாக தொழிலதிபர் மனைவி தஸ்நீம் மற்றும் ரியாஸ் அகமதுவை நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ₹44 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 

இது குறித்து போலீசார் கூறியதாவது: "தொழிலதிபர் மனைவி தஸ்நீம் பேஸ்புக்கில் அதிக நாட்டம் கொண்டவர். பேஸ்புக் மூலம் ரியாஸ் அகமது பழக்கமானார். இந்த பழக்கம் நாளடைவில் நண்பர்களாக மாற்றியது. இதனால் ஒருவரை ஒருவர் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர். தொழிலதிபர் தமீம் அன்சாரி தொழிலுக்காக வீட்டில் 44 லட்சம் பணம் வைத்திருந்தார். கடந்த 19ம் தேதி தனது மகனுக்கு வீட்டில் பெரிய அளவில் பிறந்த நாள் விழா கொண்டாடியுள்ளார்.

மறுநாள் தஸ்நீம் சூட்கேஸை எடுத்துக்கொண்டு தனது பேஸ்புக் நண்பரை ராயப்பேடையில் ஒரு இடத்தில் சந்தித்து கொடுத்துள்ளார். அதை தொழிலதிபர் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. பிறந்த நாள் விழாவுக்கு வந்தவர்கள் யாரேனும் தான் பணத்தை எடுத்து இருப்பார்கள் என்று நினைத்துள்ளார். பிறகு புகாரின்படி உறவினர்களிடம் விசாரணை நடத்திய போது, தமீம் அன்சாரியின் மைத்துனர் மகன் பிறந்த நாள் விழா நடந்த அன்று 'ஆன்டி' சூட்கேசில் பணத்தை எடுத்து வைத்ததை தான் பார்த்ததாக கூறியுள்ளார். அதன்பிறகு தான் தஸ்நீம் செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்திய போது பணத்தை தஸ்நீம் எடுத்து தனது பேஸ்புக் நண்பரிடம் கொடுத்து வைத்திருந்தது தெரியவந்தது". இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

-சுரேந்தர்.

Comments