வேதத்தில் முக்கியத்துவம்!! நாகத்தின் சிறப்புகள்!

-MMH 

நாம் வணங்கும் தெய்வங்களில் மும்மூர்த்தியான சிவபெருமான் மற்றும் விஷ்ணு பெருமானுக்கு மிகவும் நெருங்கிய இடத்தில் வைத்து வழிபடக்கூடியதாக நாகம் இருக்கிறது. நாகங்களுக்கு வேதத்திலேயே முக்கிய இடமுண்டு அதனாலேயே அவை புனிதமானதாகவும், வணங்குதலுக்குரியதாகவும் கருதப்படுகிறது. 

இன்றும் கூட நாம் நாகத்தை கழுத்தில் ஏந்தியிருக்கும் சிவபெருமானின் திருவுருவப் படங்களை காண முடியும். புராணத்தின் படி, விஷ்ணுவின் உறைவிடமான ஆனந்த ஷேசன் எனும் பிரமாண்ட பாம்பு பாற்கடலை கடைகிற போது உமிழ்ந்த விஷம் தான் ஆலகாலம். இந்த ஆலகாலத்தில் ஒரு துளி கீழே விழுந்திருந்தாலும் இந்த உலகமே அழிந்திருக்கும் என்பர். அப்பேற்பட்ட விஷத்தினை சிவபெருமான் உலகை காக்கும் பொருட்டு அருந்தினார். அப்போது உமையன்னை தடுத்து நிறுத்தியதில் தொண்டையியோடு அந்த விஷம் நின்று போகவே. அவருடைய கழுத்து பகுதி நீலமாக மாறி திருநீலகண்டர் என்ற நாமத்தை கொண்டார் சிவபெருமான்.

இவை நமக்குணர்த்தும் செய்தி யாதெனில, இதே போன்ற வல்லமை இல்லாவிடினும், இவற்றில் ஓரளவிலான வல்லமை மற்ற நாகங்களுக்கும் உண்டு . ஆயிரம் தலை கொண்ட ஆதிஷேசனில் வாசம் செய்கிறார் விஷ்ணு பெருமான். இங்கே அந்த ஆதிஷேசன் என்பது பறந்துபட்ட பிரபஞ்சத்தை குறிப்பது. அதன் மேல் விஷ்ணு பரமாத்மா வாசம் செய்வது இந்த பிரபஞ்சத்தையே அவர் தன் கட்டுபாட்டில் வைத்திருப்பதன் அடையாளம். எனவே நாகங்கள் என்பது படைப்பின் மூலத்துடன் தொடர்புடையவை

அதுமட்டுமன்றி ஆன்மீக பாதையில் மிக முக்கியமானதாக கருதப்படும் குண்டலினியும் பாம்பினை ஒத்த வடிவம் கொண்டதே. இது ஒரு ஆற்றல் இந்த ஆற்றல் ஒரு மனிதரின் முதுகு தண்டின் இறுதியில் அமைந்திருக்கும். இந்த ஆற்றல் மேலெழுகிற போது தான் ஒருவர் முக்திநிலையை அடைகிறார்கள். எனவே முக்தியின் பாதையில் யாரொருவர் பயணிக்கிறாரோ அவருக்கு இது மிக முக்கியமானது. வெறும் கேட்டல் மற்றும் தொடுதல் என்ற உணர்வில் மிக கூர்மையாக இருக்கும் படைப்பாக பாம்பு இருக்கின்றது.

எனவே இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த நாகத்தை ஒருவர் காயப்படுத்தினாலோ அல்லது கொல்ல முற்பட்டாலோ அல்லது கொன்றுவிட்டாலோ அவர்கள் சாபத்திற்கு உள்ளாவார்கள் என்பது நம்பிக்கை. இந்த சாபம் தலைமுறைகள் தாண்டியும் வரக்கூடும். இன்றும் கூட பொருளாதார ரீதியாக, குடும்ப பிரச்சனைகள் தீராத கர்ம வினைகளுக்கு இது போன்ற சர்ப தோஷம் அல்லது நாக தோஷம் காரணமாக இருப்பதை நாம் கேள்வியுற்றிருப்போம். இது போன்ற தோஷம் இருப்பதை நாம் உணர்ந்தால் அதற்கான முறையான பரிகாரங்கள், ஹோமங்கள் செய்து அந்த இன்னலிலிருந்து விடுபடும் சாத்தியங்கள் ஏராளம் உண்டு.

-சுரேந்தர்.

Comments