உயிர் பிரியும் நேரத்திலும் கடைமை தவறாத பேருந்து ஓட்டுநர் !! - பாராட்டி நெகிழ்ந்த ஊர் மக்கள்!

    -MMH

     சேலம்: சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள புள்ளாகவுண்டம்பட்டி புதூரில் வேகமாக சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தின் ஓட்டுனருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

அவர் சமயோஜிதமாக செயல்பட்டு பேருந்தை சாலையோரம் நிறுத்திவிட்டு உயிரிழந்தார். இதன் மூலம் அதில் பயணித்த 35 பயணிகள் பத்திரமாக காப்பற்றப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் எடப்பாடி மற்றும் தேவூர் பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த வாழகுட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தனியார் பேருந்து ஓட்டுநர் சுப்பிரமணி (45) இவரை சின்னப்பன் என்று ஊரில் உள்ளவர்கள் அழைப்பது வழக்கம்.

சின்னப்பன் வழக்கம் போல் குமாரபாளையத்திலிருந்து எடப்பாடிக்கு பேருந்தை ஓட்டிச்சென்றார். அதில் 35 பயணிகள் பயணித்துக் கொண்டிருந்தனர். சேலம் மாவட்டம் தேவூர் அருகே உள்ள புள்ளாகவுண்டம்பட்டி புதூர் பகுதியில் செல்லும் போது அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

அதனையடுத்து சின்னப்பன் சமயோஜிதமாக செயல்பட்டு பேருந்தை உடனடியாக சாலையோரம் நிறுத்தியுள்ளார். பொதுமக்கள் ஓட்டுநர் சின்னப்பனை மீட்டு சிகிச்சைக்காக எடப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்ததில் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். உயிரிழந்த ஓட்டுநருக்கு பழனியம்மாள் என்ற மனைவியும், குருசரண் என்ற மகனும், கௌரி என்ற மகளும் உள்ளனர்.

 மாரடைப்பு ஏற்பட்ட உடன் பேருந்தைச் சாலையோரம் நிறுத்தி 35 பயணிகளைக் காப்பாற்றிய சின்னப்பனின் செயலை பேருந்தில் பயணம் செய்த பயணிகள், ஊர் பொதுமக்கள் சக ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பாராட்டி நெகிழ்ந்தனர்.

-சுரேந்தர்.

Comments