போதையில், தென்னை மர உச்சியில் தூங்கிய தொழிலாளி!!

     -MMH

     தஞ்சாவூர்: தஞ்சை கரந்தை பகுதியில் உள்ள சருக்கை வேலூரை சேர்ந்தவர் லோகநாதன்(வயது40). தென்னை மரம் ஏறும் தொழிலாளியான இவர் நேற்று  காலை 9 மணிக்கு கரந்தை ஜெயின மூப்ப தெரு பகுதியில் தமிழரசன் என்பவரின், பராமரிப்பில் உள்ள தென்னை மரங்களில் தேங்காய் பறிக்க சென்றார்.

2 மரங்களில் ஏறி தேங்காய்களை பறித்த லோகநாதன் மிகவும் சோர்வாக காணப்பட்டார். இருப்பினும் அவர் ஓய்வெடுக்காமல் 3-வது தென்னை மரத்திலும் ஏறினார். சுமார் 55 அடி உயரம் கொண்ட அந்த தென்னை மரத்தின் உச்சிக்கு சென்ற அவர், தென்னங்குலைகளுக்கு மேலே உள்ள மட்டையில் அமர்ந்தார். ஏற்கனவே சோர்வாக காணப்பட்ட அவருக்கு தூக்கம் வந்ததால் அவரால் தேங்காய்களை பறித்து கீழே போட முடியவில்லை.

இதனால் அவர், தென்னங்குலைக்கு மேலே இருந்த மட்டையில் லாவகமாக அமர்ந்து, அதற்கு மேல் உள்ள மட்டையை இரு கைகளால் பிடித்தபடியும் மற்றொரு மட்டையில் தலையை சாய்த்து வைத்து தூங்கிவிட்டார்.

நீண்டநேரமாகியும் தென்னை மரத்தில் இருந்து தேங்காய்களை பறித்து போடாதால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் தென்னை மரங்கள் இருந்த பகுதிக்கு சென்றனர். அப்போது அங்கு லோகநாதனை காணவில்லை. இதனால் அக்கம்பக்கத்தினர் அவரை தேடினர். அப்போது லோகநாதன் தென்னை மரத்தின் உச்சியில் தென்னங்குலைகளுக்கு மேலே இருந்த மட்டையில் சுருண்டு படுத்து கிடந்தது தெரிய வந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மக்கள் சத்தம்போட்டனர். ஆனால் லோகநாதனிடம் இருந்து எந்த அசைவும் இல்லை.

இதனால் அந்த பகுதியில் மக்கள் ஏராளமானோர் கூடினர். அனைவரும் சத்தம் எழுப்பியும் எந்த அசைவும் இன்றி லோகநாதன் படுத்திருந்ததால் அவருக்கு ஏதும் ஆகிவிட்டதோ? என பதறிய மக்கள், இது குறித்து தஞ்சை மேற்கு போலீசாருக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.

உடனே தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் முதலில் பேட்டரி மைக் மூலம் கீழே இருந்து அதிக ஒலி எழுப்பி லோகநாதனை அழைத்தனர். ஆனால் அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனால் தென்னை மரத்தில் இரும்பு ஏணியை வைத்து தீயணைப்பு வீரர் ஒருவர், வேகமாக மரத்தில் ஏறினார். நீளமான கயிற்றை கட்டி லோகநாதனை கீழே இறக்கலாம் என நினைத்து கயிற்றுடன் மேல சென்ற வீரருக்கு லோகநாதனின் முனங்கல் சத்தம் கேட்டது. இதனால் அவர், தூக்கத்தில் உள்ளார் என கருதிய தீயணைப்பு வீரர், சத்தமாக லோகநாதனின் பெயரை கூறி அழைத்தார். அப்போது, திடீரென கண்விழித்த லோகநாதன், மேலே இருந்து சுற்றி பார்த்துவிட்டு மீண்டும் தூங்க முயற்சி செய்தார்.

உடனே தீயணைப்பு வீரருடன் பொதுமக்களும் சேர்ந்து சத்தம்போட்டனர். இதை கேட்ட அவர், எழுந்து கீழே பார்த்தார். அப்போது மக்கள் அதிகமாக நிற்பதை கண்ட அவர் தென்னை மட்டையை பிடித்தபடி கீழே இறங்க முயன்றார். ஆனால் தீயணைப்பு வீரர்கள் ஏணி மூலம் அவரை கீழே இறங்கி வரக் கூறினர்.

அப்போது தன்னால் மரத்தின் வழியாகத்தான் இறங்க முடியும் என கூறிய லோகநாதன் வேகமாக மரத்தின் உச்சியில் இருந்து கீழே இறங்கினார். பாதி அளவு கீழே இறங்கிய பிறகு மக்கள் எதற்காக கூடி நிற்கிறார்கள் என தெரியாதபடி லோகநாதன் தனது தலையை சொறிந்தபடியே பாதிமரத்துக்கு கீழே இறங்காமல் இருந்தார்.

போலீசாரும், தீயணைப்பு வீரர்கள் மெதுவாக கீழே இறங்கு என்று கூறியவுடன் வேகமாக பொதுமக்கள் கூடி நின்றதை பார்த்து, சிரித்து கொண்டே அவர் கீழே இறங்கினார். 3½ மணிநேர போராட்டத்திற்கு பிறகு அவர் எந்த பிரச்சினையும் இன்றி கீழே இறங்கியதை பார்த்து அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.

பின்னர் லோகநாதனிடம் போலீசார் விசாரித்தபோது தேங்காய் பறிக்கச் சென்ற போது லேசாக அசந்து தூங்கி விட்டதாகக் கூறினார். இதையடுத்து அவரை தஞ்சை மேற்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் புண்ணியமூர்த்தி விசாரணைக்காக மேற்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றார்.

அவரிடம் விசாரித்தபோது போதையில் இருந்ததால் இப்படி தூங்கிவிட்டேன் எனவும், இனிமேல் இதுபோன்று செய்யமாட்டேன் எனவும் கூறினார். இதைத்தொடர்ந்து அவரிடம் எழுத்துப்பூர்வமாக போலீசார் எழுதி வாங்கி கொண்டு இனிமேல் இப்படி செய்யக்கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

முன்னதாக லோகநாதன் மரத்தில் தூங்குவதை அறிந்த அவரது சொந்த ஊரை சேர்ந்த பலர் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள், லோகநாதனுக்கு இதே வேலைதான். இதுபோன்று ஏற்கனவே 2 முறை தென்னை மரத்திலேயே படுத்து தூங்கி இருக்கிறார் எனத் தெரிவித்தனர்.

- பாரூக், சிவகங்கை.

Comments