தடுப்பூசி பதிவு என மோசடி! மக்களே உஷார்!

-MMH

கொரோனா தடுப்பூசி பதிவு நடப்பதாக, மர்ம நபர்கள், ஆதார் எண் உள்ளிட்ட விபரங்களை பெற்று, 'ஆன்லைன்' வாயிலாக மோசடி செய்வதால், பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்' என போலீசார் எச்சரித்துள்ளனர்.

இணையதளம் வழியாக நிகழ்த்தப்படும், 'சைபர் கிரைம்' குற்றவாளிகள், சில ஆண்டுகளாக, 'உங்கள் வங்கி கணக்குடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். 'ஏ.டி.எம்.கார்டு கலாவதியாகி விட்டது. உடனடியாக புதுப்பிக்க வேண்டும்' என வங்கி மேலாளர்கள் போலப் பேசி, மோசடி செய்து வந்தனர்.

வங்கி கணக்கு எண், ஏ.டி.எம்., கார்டு, ரகசிய குறியீட்டு எண்கள் மற்றும் ஸ்மார்ட் போன்களுக்கு அனுப்பி வைக்கப்படும், 'ஒன் டைம் பாஸ்வேர்டு' எனப்படும், 'ஓடிபி' எண்களை பெற்று, பல லட்சம் ரூபாயைச் சுருட்டினர். வட மாநிலங்களில் செயல்பட்டு வந்த மோசடி கும்பலைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டனர். தற்போதும், இந்த வகையான மோசடிகள் அரங்கேறுகின்றன.

சமீபத்தில் தமிழகம், ஆந்திரா, தெலங்கானா மற்றும் கர்நாடக மாநில, ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் பெயரில், சமூக வலைதளமான, 'பேஸ்புக்'கில் போலி கணக்கை, மர்ம நபர்கள் துவக்கினர்.

ஐ.பி.எஸ். அதிகாரிகளின் நண்பர்களிடம், மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைக்கு உதவி கேட்பது போல, பல லட்சம் ரூபாயை சுருட்டினர். சென்னை, போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் பெயரிலும் மோசடிக்கு முயற்சி நடந்தது.

இது தொடர்பாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரித்து, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஷகீல்கான் (42), உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்தனர். எனினும், சைபர் கிரைம் குற்றவாளிகள் வெவ்வேறு வடிவில் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது, பொது மக்களின் மொபைல் போன் எண்களில், மர்ம நபர்கள் தொடர்பு கொள்கின்றனர். 'நாடு முழுதும், கொரோனா தடுப்பூசி போட கணக்கெடுப்பு நடக்கிறது. அதற்கான விபரங்கள், ஆன்லைன் வாயிலாக பதிவு செய்கிறோம்' எனக்கூறி, ஆதார் எண், 'இ - மெயில்' முகவரி உள்ளிட்ட விபரங்களை கேட்கின்றனர். பின், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என, 'ஓடிபி' எண் உள்ளிட்ட விபரங்களை பெற்று, சம்பந்தப்பட்ட நபர்களின் வங்கி கணக்கில் இருந்து, பண மோசடி செய்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது குறித்து, போலீஸ் உயர் அதிகாரிகள்கூறியதாவது: கொரனா தடுப்பூசி பதிவு மோசடி தொடர்பான தகவல்கள், எங்கள் கவனத்திற்கு வந்துள்ளன. ஆனால், புகார்கள் ஏதும் பதிவாகவில்லை. கொரோனா தடுப்பூசி தொடர்பாக, எவ்வித கணக்கெடுப்பும், பதிவும் நடக்கவில்லை. பொது மக்கள், ஆன்லைன் மோசடி கும்பலிடம் உஷாராக இருக்க வேண்டும். அதுபோல, யார் தொடர்பு கொண்டாலும், உடனடியாக அருகில் உள்ள, காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டுமென அவர்கள் கூறினர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ராயல் ஹமீது சிங்கம்புணரி.

Comments