பணியின் போது மது அருந்தியுள்ள வி.ஏ.ஓ.க்களை அலுவலகத்தில் வைத்து பூட்டிய பொதுமக்கள்!!
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே பணியின் போது அலுவலகத்தில் மது அருந்தி கொண்டிருந்த கிராம நிர்வாக அலுவலர்கள் இருவரை கிராம மக்கள் நேற்று அலுவலகத்தில் வைத்து பூட்டி முற்றுகையிட்டதால் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.
வி.கைகாட்டி அருகேயுள்ள பெரியநாகலூர் கிராமத்தில் பெரம்பலூர் மாவட்டம் வரகுபாடி கிராமத்தைச் சேர்ந்த புருஷோத்தமன்(30) வி.ஏ.ஓ. வாக பணிபுரிந்து வருகிறார். இவரது நண்பரான சிவா(27) அரியலூர் மாவட்டம் காமரசவல்லி கிராமத்தில் வி.ஏ.ஓ.வாக பணிபுரிகிறார். இருவரும் நேற்று பெரிய நாகலூர் வி.ஏ.ஓ. அலுவலகத்தில் மது அருந்தியுள்ளனர்.
இதைக்கண்ட கிராம மக்கள், அவர்கள் இருவரையும் அலுவலகத்தின் உள்ளே வைத்து கதவை பூட்டி விட்டு காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த அரியலூர் டிஎஸ்பி மதன்குமார், கயர்லாபாத் இன்ஸ்பெக்டர் ராஜா, துணை வட்டாட்சியர் சரவணன், வருவாய் ஆய்வாளர் ராமசாமி ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, மது அருந்தியதற்காக பரிசோதனை மேற்கொள்வதுடன், கிராம நிர்வாக அலுவலர்கள் இருவரையும் பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். நீண்டநேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் காவல்துறையினர் 2 வி.ஏ.ஓ.க்களையும் வாகனத்தில் அழைத்துச் சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-சுரேந்தர்.
Comments