புதுப்பிக்கப்பட்ட பேருந்து நிலையம் மீண்டும் பழுதடைந்தது!!

     -MMH

     திருப்பத்தூர்: புதுப்பிக்கப்பட்ட திருப்பத்தூர் பேருந்து நிலையம் செயல்படத் துவங்கிய முதல் நாளே தரைத்தளம் பழுதடைந்தது. 

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பேருந்து நிலையம் ‘சீர்மிகு நகரம்’ திட்டத்தின் கீழ் ரூபாய் 3.30 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட பின்னரும், கடந்த சில மாதங்களாக திறக்கப்படாமல் இருந்தது. வர்த்தக சங்கம் உள்ளிட்ட பல பொது அமைப்புகள் பேருந்து நிலையத்தை திறக்க முதல்வருக்கு கோரிக்கை விடுத்த நிலையில், கடந்த 4ஆம் தேதி சிவகங்கைக்கு வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி மூலம் திறந்து வைத்தார். அதன்பின்னரும் திருப்பத்தூர் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வராமல் இருந்தது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை ஆய்வுக்கு வந்த மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி, திங்கட்கிழமை முதல் பேருந்து நிலையம் செயல்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுச் சென்றார். அதன்படியே இன்று காலை முதல் பேருந்துகள், திருப்பதூர் பேருந்து நிலையத்திற்குள் வந்து சென்றன. ஆனால் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. 

மேலும் பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்ல ஆரம்பித்த சில மணி நேரங்களிலேயே தரைத்தளம் சேதமடைந்துள்ளது. பேருந்துகள் செல்லச் செல்ல, இன்னும் பெரிய பள்ளம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. விபத்து ஏதும் நடப்பதற்கு முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-திருப்பத்தூர், அப்துல்சலாம்.

Comments