அரசு வழங்கக் கூடிய பொங்கல் பரிசில் அதிமுக முறைகேடு! ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!
பொங்கல் பண்டிகைக்காக அரசு வழங்கக்கூடிய ₹.2500/- நிதியை அதிமுக வழங்குவது போல் அதிமுக தொண்டர்கள் டோக்கன் வழங்கும் பணியில் ஈடுபடுவதை கண்டித்து, திமுக சார்பில் தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, "தமிழ்நாடு அரசு அறிவித்த பொங்கல் பரிசுத் தொகையான ₹2,500ஐ, அதிமுக கட்சி நிதி போல் அதிமுகவினர் வழங்கும் பொங்கல் பரிசைப் போல வழங்கி வருகின்றனர்.
தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் பழனிசாமி பொங்கல் பரிசு வழங்கப்படும் என அறிவித்து விதி மீறலில் ஈடுபட்டுள்ளார். அதேபோன்று அமைச்சர்கள் வேலுமணி மற்றும் ஜெயகுமார் தங்களது தொகுதியில், அவர்களுடைய பெயரைப் பயன்படுத்தி பொங்கல் பரிசு தொகைக்கான டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. கடைத் தேங்காயை வழிப் பிள்ளையாருக்கு வழங்குவது போல், அரசு கஜானாவிலிருந்து அதிமுக தேர்தல் பரப்புரை நிதியாக வழங்குகிறது.
இதுகுறித்து தலைமைத் தேர்தல் அலுவலரை நேரில் சந்தித்து புகார் அளித்துள்ளோம். நடவடிக்கை எடுக்காவிடில் பொங்கல் பரிசு ₹.2,500ஐ அதிமுக தேர்தல் நிதியாக கொடுப்பது குறித்து சட்ட ரீதியாக உயர் நீதிமன்றத்தை நாடுவோம்" என்றார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-பாரூக்.
Comments