வேளாண் சட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் மத்திய அரசின் கேல் ரத்னா விருதை திரும்பத் தருவேன் - குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங்!!

 

     -MMH

     டெல்லி: மத்திய அரசு வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று, குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் விவசாயிகளுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளார். வேளாண் சட்டத்தைத் திரும்பபெறாவிட்டால் 'கேல் ரத்னா' விருதை திருப்பியளிப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் புராரி மைதானத்திலும், டெல்லியின் எல்லைப்பகுதிகளிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல் எல்லை நெடுஞ்சாலைகளில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை 11வது நாளாக இன்றும் தொடர்கின்றனர்.  பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி, வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையில் விவசாயிகள் உறுதியாக இருப்பதால், மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படவில்லை. விவசாயிகளின் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்தவண்ணம் உள்ளன.

இந்நிலையில், சிங்கு எல்லையில் நடைபெறும் போராட்டத்தில், பிரபல குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் இணைந்தார். அப்போது விவசாயிகளுக்கு ஆதரவாகப் பேசிய விஜேந்தர் சிங், வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினார். விவசாயிகளுக்கு எதிரான கறுப்புச் சட்டங்களை அரசாங்கம் திரும்பப் பெறாவிட்டால், எனக்கு வழங்கப்பட்ட நாட்டின் உயரிய விளையாட்டு விருதான, ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை திரும்பத் தருவேன் என விஜேந்தர் சிங் கூறினார்.

- பாரூக், சிவகங்கை.

Comments