ராணுவத்திற்கு தேவையான பொருட்கள் தயாரிக்க கோவை நிறுவனங்கள் ஒப்பந்தம்.!!

 

     -MMH

     கோவை:ராணுவ தேவைகளுக்கான பொருட்களை தயாரிக்க, கோவையை சேர்ந்த மூன்று நிறுவனங்களும், சென்னையை சேர்ந்த ஒரு நிறுவனமும் முன்வந்துள்ளன. 'கொடிசியா டிபன்ஸ் இன்னோவேஷன் அண்ட் அடல் இன்குபேஷன் சென்டருடன்' இந்நிறுவனங்கள், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டன.

ராணுவத்துக்கு தேவையான பொருட்களை, உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய வேண்டும் என்ற நோக்கில், கோவை, ஒசூர், திருச்சி, சென்னையை உள்ளடக்கிய, ராணுவ தளவாட உற்பத்தி மண்டலம் உருவாக்கப்பட்டது. 

கோவையை தலைமையிடமாகக் கொண்டு, கொடிசியாவுடன் இணைந்து ரூ.45 கோடி செலவில், ஒரு பொது வசதி மையம் அமைக்க திட்டமிடப் பட்டுள்ளது. இந்த மையத்துக்கான கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. கொடிசியா இன்னோவேஷன் சென்டர் மற்றும் அடல் இன்குபேஷன் சென்டர் உருவாக்கப்பட்டு செயல்பட துவங்கியுள்ளது. 

முதல் கட்டமாக, ராணுவத்தினருக்கு தேவையான புதிய கண்டுபிடிப்புகளை தேர்வு செய்யும் பணியை, இந்த மையம் மேற்கொண்டுள்ளது. இதில், கோவையை சேர்ந்த மூன்று நிறுவனங்களும், சென்னையை சேர்ந்த ஒரு நிறுவனமும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. உள்நாட்டு தேவைக்கு மட்டுமின்றி, ராணுவ பயன்பாட்டிற்கும் இவர்களது தயாரிப்பை மாற்றி அமைக்க முடியும். இதன் அடிப்படையில், இந்த நான்கு நிறுவனங்களையும், கொடிசியா டிபன்ஸ் இன்னோவேஷன் அண்ட் அடல் இன்குபேஷன் சென்டர் தேர்வு செய்து, புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த மையம், ராணுவத்துக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்யவும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கும், நிதியுதவிக்கு உதவியாக செயல்படும். இன்னும் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்களது கண்டுபிடிப்புகளை, ராணுவத்துக்கு தேவையான பயன்பாடாக மாற்றும் விதம் குறித்து, விளக்கம் அளித்து வருகின்றன.

-சுரேந்தர்.

Comments