மாநிலக் கல்வித் திட்டத்தில் மாற்றங்கள் கோரி, இராமநாதபுரம் - கன்னியாகுமரி முதல் சென்னை வரை சுவரொட்டிப் பிரச்சாரம்!

 

-MMH

தமிழகமெங்கும் 15 அமைப்புகளின் சார்பாக கோரிக்கைச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கிறது. நாளைய தலைமுறையினரை நல்வழிப்படுத்தவும், மாநிலக் கல்வித் திட்டத்தில் மாற்றங்கள் செய்யக்கோரியும், சுவரொட்டி வழி கோரிக்கைப்  பிரச்சாரம் செய்யப்படுகிறது.  

தமிழக மக்கள் மன்றத்தின் தலைவர் ச.மீ.இராசகுமார் தலைமையில் தமிழர் கட்சி, பச்சைத்தமிழகம், தமிழ்நாட்டுக் கல்வி இயக்கம், மள்ளர் பேராயம், வனவேங்கைகள் கட்சி, இசுலாமிய சேவை சங்கம், தாய்நாடு மக்கள் கட்சி, முல்லை நிலத்தமிழர் விடுதலைக் கட்சி, AVMK கட்சி, மக்கள் சட்ட உரிமை இயக்கம்,  தமிழர் தேசியக் கழகம்,

தமிழக முன்னேற்றக் கழகம், உலகத்தமிழர் பாசறை, தமிழ்வழிக் கல்வி இயக்கம், தமிழர் பண்பாட்டு மனிதநேய மன்றம் என பதினைந்துக்கும் மேற்பட்ட சமூக நல அமைப்பினர் ஒன்றுகூடி இந்த பிரச்சாரத்தினை மேற்கொண்டு வருகிறார்கள். 

ஐம்பதாண்டு காலத்திற்கும் மேலாக ஒரே கல்வி நேரம் இருந்துவருகிறது. அந்தக் காலத்தில் இருபது கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பள்ளி செல்வதற்கு காலை 9.30மணி என்பது சரியானதாக இருந்தது. இப்போது தடுக்கிவிழுந்தால் பள்ளிகள் என அதிகமான பள்ளிகள், பள்ளி செல்ல வாகனங்கள் என அனைத்து வசதிகளும் இருந்தும் இன்னும் காலை 9.30முதல் மாலை 4மணி வரை என்பது சரியானதல்ல. 

மதிய உணவுக்குப் பின் தூங்கிவிழும் கல்வி நேரம் மாற்றப்பட வேண்டும் எனவும், பச்சிளம் குழந்தைகளை ஒன்றரை மணி நேரம் பயணிக்கவைத்து ஐம்பது கிலோமீட்டர் தூரம் பள்ளிக்கு அனுப்பி கொடுமைப்படுத்துவதைத் தடுக்க அருகாமைப்பள்ளிச் சட்டம் கொண்டு வரவேண்டும் எனவும், வாந்தியெடுக்கும் தேர்வுமுறை மாற்றப்படவேண்டும், 

கட்டாய தாய்மொழிக் கலவி, உலக நாடுகளைப்போன்ற சிறந்த கல்வித்திட்டம், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அரசுக் கல்லூரிகளில் 50% இட ஒதுக்கீடு, அரசுப்பள்ளியில் படித்தவர்களுக்கே அரசுப்பணி, புதிய அரசுப்பணியாளர்களின் பிள்ளைகள் அரசுப்பள்ளிகளிலேயே படிக்கவேண்டும் என்கின்ற சட்டம் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. 

அதில் மாநிலக் கல்வியானது பொதுப்பட்டியலில் இருந்து தனிப்பட்டியலுக்கு மாற்றப்படவேண்டும் எனவும், பாடப்புத்தகத்தில் தமிழ் மருத்துவமும், தமிழ் சித்த மருத்துவத்திற்கு பல்கலைக்கழகம் ஏற்படுத்த வேண்டுமெனவும் சொல்லப்பட்டிருக்கிறது.

-பாரூக், சிவகங்கை.

Comments