மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு!
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் பல்வேறு இடங்களில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி திடீரென ஆய்வினை மேற்கொண்டார். திருப்பத்தூர் பேருந்து நிலையம் எதிரில், ஊராட்சி ஒன்றியத்திற்குச் சொந்தமான வணிக வளாகத்தில் உள்ள 'முல்லை சுய உதவிக்குழு' நிர்வகிக்கும் கடையில் மாற்றுதிறனாளிகள் தயாரித்த கைவினைப் பொருட்களை பார்வையிட்டார். அதனை தொடர்ந்து அந்த வளாகத்திற்கு பின்புறம் இடிந்த நிலையில் உள்ள மங்கம்மா சத்திரத்தையும் பார்வையிட்டார்.
அதில் வணிக வளாகம் கட்டுவது குறித்து ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சண்முகவடிவேல் மாவட்ட ஆட்சியரிடம் வேண்டுகோள் வைத்ததைத் தொடர்ந்து அந்த இடத்தினை ஆய்வு செய்தார். பின்பு உழவர் சந்தையை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், உழவர் சந்தை நிலவரம் குறித்தும் இதில் விற்கப்படும் வேளாண் பொருட்கள் குறித்தும், எந்த ஊரிலிருந்து விவசாயிகள் இங்கு வந்து பொருட்களை விற்பனை செய்கிறார்கள் என்ற விவரத்தையும் கேட்டபோது, விவசாயிகளின் விபரம் தெரியாமல் நின்ற அலுவலரை
கண்டித்தார்: பின்பு, மதியம் 2 மணி வரை காய்கறிகள் விற்று வந்த நிலையில் விற்பனை நேரத்தை மாலை 6 மணி வரை நீட்டிக்க விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் வேண்டுகோள் விடுத்தனர். அதனை ஏற்று காய்கறி விற்பனைக்கான நேரத்தை மாலை 6 மணி வரை நீட்டிக்க வழிவகை செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.
-அப்துல்சலாம், திருப்பத்தூர்.
Comments