சிபிஐ கஸ்ட்டடியில் திருட்டு! தங்கக்கட்டிகள் மாயம்..!

 

-MMH

எதற்கெடுத்தாலும் சிபிஐ விசாரணை கோரி வரும் நிலையில், சிபிஐ சம்மந்தப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரிக்க இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பலவேறு வழக்குகளில் மத்திய புலனாய்வு அமைப்புகள் பறிமுதல் செய்த தங்கக்கட்டிகள் காணாமல் போவது தமிழகத்தில் தொடர்கதையாகி வருகிறது. இதற்கு சிபிஐயும் விலக்கல்ல என்பது 103 கிலோ தங்கக்கட்டிகள் மாயமான வழக்கில் அம்பலமாகியிருக்கிறது.

சென்னை பாரிமுனையில் உள்ள சுரானா என்ற தனியார் நிறுவனத்தினர் வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக தங்கக்கட்டிகளை இறக்குமதி செய்தனர் என்பது புகார்.

இதற்கு மத்திய கனிமம் மற்றும் உலோக வணிகக் கழக அதிகாரிகளும் துணை போனதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் பேரில் சுரானா நிறுவனத்தில் கடந்த 2012-ம் ஆண்டு சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது பறிமுதல் செய்யப்பட 400 கிலோ தங்க நகைகள் மற்றும் தங்க கட்டிகள் சுரானா நிறுவனத்தின் லாக்கரில் வைத்து சிபிஐ அதிகாரிகளால் சீலிடப்பட்டது. அவற்றினை திருப்பி ஒப்படைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பேரில் லாக்கரில் உள்ள தங்க கட்டிகளை எடை போட்ட போது 103 கிலோ மாயமாகி இருப்பது தெரிய வந்தது. 103 கிலோ தங்கம் மாயமானது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதிகள், சிபிசிஐடி விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய உத்தரவிட்டனர். வழக்கமாக மாநில போலீசார் சரியாத விசாரிக்காத வழக்குகளில் சிபிஐ விசாரணை கேட்கும் நிலையில் சிபிஐ சம்மந்தப்பட்ட வழக்கையே சிபிசிஐடி போலீசார் விசாரிக்க உள்ளனர். இதனால் விசாரணை முழுமையாக நடைபெறுமா என கேள்வி எழுப்புகின்றனர் சமூக  ஆர்வலர்கள். தற்போது சிபிஐ என்றால், இதற்கு முன்பு சுங்கத்துறையினர் பறிமுதல் செய்த தங்க கட்டிகள் மற்றும் வைரங்களும் மாயமான சம்பவங்கள் தமிழகத்தில் அடுத்தடுத்து நடந்துள்ளன.

2015-ம் ஆண்டு திருச்சியில் சுங்கத்துறை குடோனில் 30 கிலோ தங்க கட்டிகள் மாயமான சர்ச்சையில் சுங்கத்துறை அதிகாரிகள் பலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். சிபிஐ நடத்திய விசாரணையின் முடிவு குறித்து இதுவரை எந்த ஒரு தகவலும் இல்லை என ஆதங்கப்படுகின்றனர் திருச்சிவாசிகள்.

பெங்களூரு விமான நிலையத்தில் உள்ள சுங்கத்துறை குடோனில் 2.50 கிலோ தங்க கட்டிகள் சமீபத்தில் மாயமானது. அவை அனைத்தும் 13 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டவை ஆகும். இது தொடர்பாக சென்னை சுங்கத்துறை உதவி ஆணையர் உள்ளிட்ட 6 பேர் மீது கடந்த அக்டோபர் மாதம் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

நாடு முழுவதும் புலனாய்வு அமைப்புகள் பறிமுதல் செய்யும் தங்கம் ஆண்டுதோறும் குறிப்பிட்ட அளவு மாயமாவதும், அது குறித்து விசாரணைக்கு உத்தரவிடுவதும் வாடிக்கையாக மாறி விட்டது. ஆனால் மாயமான தங்கத்தில் ஒரு பகுதியானது மீட்கப்படுகிறதா? முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படுகிறார்களா? என்பது உள்ளிட்ட அடுக்கடுக்கான கேள்விகள் விடை தெரியாமலேயே தொடர்கின்றன.

-பாருக், சிவகங்கை.

Comments