அமெரிக்காவில் எழும்பி நிற்கும் அருள்மிகு மகாகணபதி ஆலயத்தின் சிறப்புகள்!!

    -MMH

     உலகின் எந்த பகுதிக்கு இந்து மக்கள் குடியேறினாலும், தங்களது வழிபாட்டையும் பாரம்பரியத்தையும் கைவிடமாட்டார்கள். செல்லுவிடமெல்லாம் தங்கள் தெய்வங்களுக்கு ஆலயம் எழுப்பும் அரும்பணியை அர்பப்ணிப்புடன் செய்து முடிப்பார்கள்.

மலேசியா மற்றும் சிங்கப்பூரில் எழுந்து நிற்கும் இந்துக்கோயில்கள் இந்த உண்மையை உலகுக்கு உணர்த்தும். சமீபத்தில் துபாயிலும் கோயில் பணி துவங்கியுள்ளது.

இந்த வரிசையில் அமெரிக்காவும் உண்டு. இங்கு பல கோயில்கள் எழுப்பப்பட்டுள்ளன. இவற்றில் முக்கியமானது அரிசோனா பகுதியில் எழும்பி நிற்கும் அருள்மிகு மகாகணபதி ஆலயம்!

ஆகம விதிகளை அப்படியே பின்பற்றி, அமைக்கப்பட்டுள்ளது இக்கோயிலின் கூடுதல் சிறப்பு. அதோடு, பூஜைகள், விழாக்கள் அனைத்தும் நமது பாரம்பரிய நெறிப்படு நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அந்த கணபதி ஆலயம் குறித்து இங்கே ஒரு கண்ணோட்டம்.

சிகரத்தில் அதிசயம்:    

அரிசோனா மாநிலத்தில், பீனிக்ஸ் மாநகரத்திலிருந்து நாற்பது மைல் தொலைவில் அமைந்துள்ளது மகாகணபதி ஆலயம். மலைப்பகுதிக்கு அருகாமையில் அமைந்திருக்கும் இந்த விநாயகப்பெருமானை, மாலை 3:45 மணி முதல் 5 மணி வரை சூரியனின் மறையும் சமயத்தில் காண கண்கோடி வேண்டும்! மாலை நேரத்து சூரியக்கதிர்கள், மலை முகடுகளின் இடையே ஒளிவீச.. விநாயகரின் அற்புதத் தோற்றம் நம்மை மெய்மறக்கச் செய்யும்!

ஸ்தல புராணம்:

அமெரிக்காவின் ஹவாய் தீவை நாம் அனைவரும் அறிவோம். அத் தீவு போலவே, இயற்கை எழில் மிகுந்த கவாய் தீவும் அருகிலேயே இருக்கிறது. அங்கு புகழ்பெற்ற சிபக்தரும் மடாதிபதியுமான சிவாய சுப்ரமணியர் கனவில், "ஹரிசோனாவுக்கு பிள்ளையார் சிலை வருகிறது. அதற்கு ஆலயம் அமையுங்கள்" என்று அருள் வாக்கு சொல்லப்படுகிறது.

இதையடுத்து, சைவ ஆதீன ஸ்தாபகர், சமாதி அடைந்த குருதேவர் சுப்பிரமுனிய சுவாமி, மாமல்லபுரத்தில் வடிவமைத்து வழங்கிய, நான்கு அடி உயர விநாயகர் சிலையை, ஒரு வீட்டில் வைத்து இந்து மக்கள் வழிபட்டனர்.

அதன் பிறகு, 2,100 சதுர அடி ஒரு கட்டடத்தில் விநாயகரை பிரதிஷ்டை செய்தனர். ஒவ்வொரு சனி, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தி பரவசத்துடன் வழிபாடு நடந்ததுத்தப்பட்டது. அர்ச்சகரும் நியமிக்கப்பட்டார். . விநாயகருக்கு கோவில் கட்ட "மகிமா" என்னும் கலை நிகழ்ச்சி மூலம் நிதி திரட்டப்பட்டது.

ஆலயத்துக்கான அஸ்திவாரம்:

பக்தகோடிகள் பேராதரவு தர. தமிழ்நாட்டின் புகழ்மிக்க கோவில் ஸ்தபதிகளில் ஒருவரான முத்தையா ஸ்தபதியின் வடிவைப்பு உதவியுடன் ஆலயம் எழுப்பும் பணி தொடங்கியது. 7,600 சதுர அடி பரப்பளவில்ல் ஒரு கோவில் மண்டபத்துடன் கூடிய ஆலயம் எழுந்தது. தமிழகத்தில் இருந்து வந்த நான்கு சிற்பிகள் கர்ப்பக்கிரகத்தில் சுதைச் சிற்பங்களை வடிவமைத்தனர். 2008ம் ஆண்டில் விநாயகர் நடுநாயகமாக எழுந்தருள, கோதாவரி ஆற்றுக் கல்லில் உருவாக்கப்பட்ட சிவலிங்கமும், பாலாஜியும், அவருக்கு இரு புறமும், மற்றும் நவ க்கிரகங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. விமானங்களும், ராஜ கோபுரமும் கட்டி முடிக்கப்பட்டன.

-சுரேந்தர்.

Comments