தப்லீக் ஜமாத்தினர் மீதான வழக்கு! போலீஸைக் கண்டித்த டெல்லி நீதிமன்றம்!

-MMH

தப்லீக் ஜமாத்தினர் மீதான வழக்கு! வெளிநாட்டினர் 36 பேரும் விடுவிப்பு! போலீஸைக் கண்டித்த டெல்லி நீதிமன்றம்! இந்தியாவில் கொரோனா பரவுவதற்கு காரணம் டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாஅத் மாநாடுதான் என்று மத்திய அரசு தரப்பில் செய்தி பரப்பப்பட்டது. தப்லீக் ஜமாஅத்தினர்தான் இந்தியாவில் கொரோனாவை பரப்பும் உச்சபட்ச நபர்கள் என்றும் இவர்கள் வெடிகுண்டு போன்று நடமாடி வருகின்றார்கள் என்றும் பாஜகவினர் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் அவதூறு பரப்பி வந்தார்கள். இந்த அவதூறு பரப்புரைகள் காரணமாகத் திட்டமிட்டு முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வு உருவாக்கப்பட்டது.

வெறுப்புப் பரப்புரையுடன் நிற்காமல், மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் அடிப்படையில் தப்லீக் ஜமாத்தின் தலைவர் முகமது சாத் மீதும், இந்தியாவிற்கு ஆன்மீக சுற்றுப்பயணம் வந்திருந்த 950க்கும் மேற்பட்ட வெளிநாட்டு தப்லீக் ஜமாஅத்தினர் மீதும் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடைபெற்றுவந்தது. நாடு முழுவதும்  தப்லீக் ஜமாஅத்தினர் கைது செய்யப்பட்டார்கள்.

தமிழகத்திலும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் அடிப்படையில் 12 பெண்கள் உட்பட 129 தப்லீக் ஜமாஅத்தினர் கைது செய்யப்பட்டனர். இந்தச் சூழலில் பெரும்பாலான வெளிநாட்டு தப்லீக் ஜமாஅத்தினர்,  தமது தாய்நாட்டிற்குத் திரும்ப வேண்டும் என்ற நிர்பந்தத்தின் காரணமாக நீதிமன்றத்தில் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டு, சிறையிலிருந்த காலம் தண்டனைக் காலமாகக் கருதப்பட்டு, அதற்கு மேல் அபராதமும் செலுத்தி, தம் வழக்கை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பினர்.

இவர்களில் 44 வெளிநாட்டினர் மட்டும், தம் மீது சுமத்தப்பட்ட வழக்கை எதிர்த்து வழக்காடினர். இந்த வழக்கை விசாரித்த டெல்லி பெருநகர தலைமை குற்றவியல் நடுவர், இவர்கள் அனைவரையும் விடுதலை செய்துள்ளார். இவ்வாறு விடுதலை செய்யப்பட்ட 8 வெளிநாட்டினர் மீது பூர்வாங்க ஆதாரம் இல்லை என்றும் எஞ்சிய 36 நபர்கள் மீது கொரோனாவை பரப்பியதற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் விசாரணையில் தெரிய வருவதாக குறிப்பிட்டு குற்றவியல் நடுவர் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

டெல்லியில் உள்ள தப்லீக் தலைமையகம் தான் கொரோனாவை பரப்பிய மையம் என்று வர்ணிக்கப்பட்டது. இவர்களில் ஒருவர் கூட குறிப்பிட்ட அந்த காலத்தில் அங்கு இருக்கவில்லை என்றும். இவர்களைக் குற்றவாளியாக்க வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சகத்தின் தீய நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் தான் இவர்கள் பல்வேறு இடங்களில் இருந்து கைது செய்யப்பட்டார்கள் என்றும் டெல்லி தலைமை குற்றவியல் நடுவர் தனது தீர்ப்பில் மோடி அரசிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதே போல் மும்பை உயர்நீதிமன்றத்தின் அவுரங்காபாத் கிளை அமர்வு, கொரோனா பரவல் தொடர்பாக வெளிநாட்டு தப்லீக் ஜமாஅத்தினர் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டபோது, 'அரசியல் காரணங்களுக்காக கொரோனா பரவலாக்கத்திற்கு தப்லீக் ஜமாஅத்தினர் பலிகடாவாக்கப்பட்டனர்' என்று குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.

-ராயல் ஹமீது, சிங்கம்புணரி.

Comments