ஒழலூர் ஏரி நிரம்பியது! - வீட்டுமனை வாங்கிய மக்கள் ஏமாற்றம்!!

     -MMH

    செங்கல்பட்டு அடுத்த ஒழலூரில் 196 ஏக்கரில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரி நீர் மூலம் புதுப்பாக்கம், ஒழலூர், ஒத்திவாக்கம், மணப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 1,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

இந்த ஏரியையொட்டி தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் மூலம் வீட்டு மனைப் பிரிவுகள் விற்பனை செய்யப்படுகின்றன. 'ஏரியின் நீர்ப்பிடிப்புப் பகுதியான இங்கே வீட்டுமனைப் பிரிவுகள் அமைக்கக் கூடாது' என ஆரம்பத்தில் இருந்தே அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் பெய்த கனமழையில் ஒழலூர் ஏரி நிரம்பியதை அடுத்து அந்த மனைப்பிரிவு முழுவதும் நீரில் மூழ்கியது.

2016-ம் ஆண்டு, ஒழலூர் ஏரியைபாதுகாக்க கோரி கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதன் விளைவாக ஏரி அருகில் இருக்கும் தனியார் நிலம் நீர்பிடிப்புப் பகுதி என பதிவேட்டில் திருத்தம் செய்யப்பட்டது. இதுகுறித்து செங்கல்பட்டு வழக்கறிஞர் முனிசெல்வம் கூறியதாவது: "ஒழலூர் ஏரி அருகே உள்ள இடத்தை வீட்டுமனைப் பிரிவுகளாக மாற்றுவதை எதிர்த்து அப்போதே பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. அப்போதைய காஞ்சி ஆட்சியர் கஜலட்சுமியிடம் மனு கொடுத்ததும், வருவாய்த் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து,'யு.டி.ஆர் வரையறை செய்யப்படுவதற்கு முன்பே இந்த இடங்களில் பட்டா வாங்கி உள்ளனர்.

ஆகவே, தண்ணீர் தேங்காதபோது இந்த இடங்களில் பயிர் செய்து கொள்ளலாம். நிலத்தின் தன்மையை மாற்றக்கூடிய எந்தக் கட்டுமான வேலையையும் தொடரக் கூடாது' என உத்தரவு பிறப்பித்தனர்.

ஆனாலும், அனைத்து அதிகார தரப்பினரையும் இணங்க வைத்து,2018-ம் ஆண்டில் மீண்டும் அந்த இடத்தில் வீட்டுமனை அமைத்து விற்கப் பட்டு விட்டன. தொடர்ந்து நாங்கள் புகார் அளித்தும் அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக் கொண்டு இதற்கு துணைபோகின்றனர். இதனால் வீட்டுமனை வாங்கிய மக்கள்தான் ஏமாற்றம் அடைந்துள்ளனர்" என்றார்.

-சுரேந்தர்.

Comments