ரயில் முன்பதிவு புதிய விதிகளை வெளியிட்டது IRCTC - தரகர்களின் அடாவடித்தனம் இனி செல்லாது!!

     -MMH

     புதுடெல்லி: ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான விதிகளில் இந்திய ரயில்வேயின் டிக்கெட் பிரிவான இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் (IRCTC) மாற்றம் செய்துள்ளது. இப்போது, ​​டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது, ​​பயணிகள் தங்களது தொடர்பு விவரங்களாக தங்கள் சொந்த மொபைல் எண்ணை வழங்க வேண்டும்.

இந்தியன் ரயில்வேயில் (Indian Railways) டிக்கெட் தரகர்கள் மற்றும் போலி டிக்கெட் விற்பனையாளர்கள் அதிகரித்து விட்டனர். அவர்களின் செயல்களைக் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில காலங்களாகவே மக்கள் இடைத்தரகர்கள் மூலம் மிக அதிக விலையில் டிக்கெட்டுகளை வாங்குகிறார்கள். IRCTC-யின் புதிய விதியின் படி பயணிகள் தங்கள் சொந்த மொபைல் எண்ணை அளிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப் பட்டுள்ளதால், தரகர்களின் அடாவடித்தனம் இனி செல்லாது.

டிக்கெட்டுகளில் பயணிகளின் மொபைல் எண்கள் இல்லாததால் (தரகர்கள் மூலம் அல்லது மற்றவர்களின் IRCTC அகௌண்டில் புக் செய்யப்பட்ட டிக்கெட்டுகள்) அவர்களது மொபைல் எண் பயணிகள் முன்பதிவு அமைப்பில் (PRS) பதிவு செய்யப்படுவதில்லை என்பதை இந்திய ரயில்வே கவனித்துள்ளது.

இதன் காரணமாக பயணிகள் பெரும்பாலும் அவர்களின் மொபைல் தொலைபேசிகளில் எஸ்எம்எஸ் அறிவிப்புகளைப் பெற முடிவதில்லை. ரயில் ரத்து செய்யப்படுவது அல்லது ரயிலின் அட்டவணையில் திருத்தம் தொடர்பான தகவல்களும் பயணிகளை சென்றடைவதில்லை.

ரயில் பயணிகள் இப்போது நிகழ்நேர PNR நிலையையும் (PNR Status) பயணம் தொடர்பான பிற தகவல்களையும் வாட்ஸ்அப் மூலம் எளிதாகத் தெரிந்து கொள்ளலாம். இதற்காக, பயணிகள் தங்கள் மொபைலில் ஒரு எண்ணை சேவ் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இதற்கான முழுமையான செயல்முறை இதோ:.

1. உங்கள் ஸ்மார்ட்போனில் 9881193322 என்ற தொலைபேசி எண்ணைச் சேவ் செய்யவும்

2. Whatsapp-ஐ ஓப்பன் செய்து 9881193322 எண்ணுடனான சேட் பாக்சை திறக்கவும்

3. அடுத்தது நீங்கள் சேட் பாக்சில் PNR எண்ணை டைப் செய்து அனுப்ப வேண்டும்

4. சரிபார்ப்புக்கு கேட்கப்படும் தகவல்களுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும்

5. மேற்கண்ட செயல்முறையை நீங்கள் முடித்ததும், உங்கள் பயணம் தொடர்பான புதுப்பிப்புகளை Whatsapp-ல் தொடர்ந்து பெறுவீர்கள்.

இந்த ஆண்டு நவம்பரில், டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான புதிய விதியை IRCTC அறிவித்துள்ளது. இந்த புதிய விதிப்படி, ரயில்கள் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் இரண்டாவது முன்பதிவு சார்ட் (Reservation Chart) தயாரிக்கப்படும்.

முன்னதாக, தொற்றுநோய்களின் போது, ​​பயணிகளின் வசதிக்காக ரயில் புறப்படுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக முன்பதிவு சார்ட் தயாரிக்கப்பட்டு வந்தது. தொற்றுநோய்க்கு முன்னர், புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பு, முதல் முன்பதிவு சார்ட் மட்டுமே தயாரிக்கப்படுவது வழக்கமாக இருந்தது. மீதமுள்ள இடங்களை பயணிகள் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் அல்லது பயணிகள் முன்பதிவு அமைப்பு (பிஆர்எஸ்) கவுண்டர்களுக்கு சென்றும் புக் செய்யலாம். முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்ற முறை இருந்தது.

-சுரேந்தர்.

Comments