கைதான 2 சீனர்கள் பின்னணி குறித்து பரபரப்பு தகவல்கள்! - 25 மோசடி 'ஆப்புகளை முடக்க கூகுள் நிறுவனத்துக்கு கடிதம்!!

     -MMH 
     சென்னை: ஆன்லைன் மோசடி ஆப் மூலம் 1 லட்சம் பேருக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை கடன் கொடுத்து 36 விழுக்காடு வட்டி பெற்று ரூ.300 கோடி சுருட்டிய 2 சீனர்களின் பின்னணி குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. 
சென்னை வேங்கைவாசல் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், கொரோனா காலகட்டத்தில் வேலை வாய்ப்பு இல்லாததால் பணத் தேவை எனக்கு ஏற்பட்டது. ஆன்லைன் இன்ஸ்டன்ட் லோன் ஆப் மூலம் கடன் கொடுப்பதாக சமூக வலைத்தளங்களில் வெளியான விளம்பரத்தை பார்த்தேன்.
அதன்படி 'எம் ரூப்பி' என்ற ஆன்லைன் ஆப்பை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்தேன். அந்த ஆப்பில் எனது பேன் கார்டு, ஆதார் கார்டு மற்றும் புகைப்படம் ஆகியவற்றை பதிவேற்றம் செய்தேன். அதன் பிறகு ஆப் மூலம் ரூ.5 ஆயிரம் கடன் வாங்கினேன்.

பிறகு இந்த கடனுக்கு அந்த லோன் ஆப் நிறுவனம் வட்டியாக ரூ.1,500 பிடித்து கொண்டு ரூ.3,500 வங்கி கணக்கில் செலுத்தினர். பின்னர் ஒரு வாரத்தில் ரூ.5 ஆயிரம் கட்ட வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர். இந்த கடனை கட்ட கடன் வழங்கும் மற்றொரு ஆப் மூலம் கடன் வாங்கினேன். இதுபோல் 40க்கும் மேற்பட்ட ஆன்லைன் ஆப் மூலம் கடன் வாங்கி ஒரு கட்டத்தில் ரூ.100க்கு 2 விழுக்காடு வட்டி கட்டி கொண்டு வந்தேன். பிறகு எனது செல்போன் மூலம் கடன் கொடுத்த ஆப் நிறுவனத்தில் இருந்து ஆபாச வார்த்தை மூலம பேசியும், வாட்ஸ் அப் மூலமும் மிரட்டி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட ஆப் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.

அதன்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், பெங்களூருவில் இருந்து செயல்பட்டு வரும் ஆன்லைன் ஆப் நிறுவனம் ஒன்று மிரட்டி வந்தது தெரியவந்தது. அதன்படி புகார் அளித்த கணேசனை தொடர்பு கொண்ட செல்போன் எண்ணை வைத்து விசாரணை செய்ததில், 'ட்ரூ கின்டில் டெக்னாலஜி பிரைவேட் லிமிடட்' என்ற பெயரில் 110 பேர் வேலை செய்யும் கால் சென்டர் என தெரியவந்தது. அந்த கால் சென்டரை பெங்களூரை சேர்ந்த பிரமோதா(27) மற்றும் பவான்(28) ஆகியோர் நடத்தி வருவதும் தெரியவந்தது. இவர்கள் இருவரும் சீனாவை சேர்ந்த மோசடி கும்பலுக்காக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

இவர்கள் பல்வேறு பெயர்களில் சீனாவில் உருவாக்கப்பட்ட 25க்கும் மேற்பட்ட மோசடி ஆன்லைன் ஆப் மூலம் தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா என பல்வேறு மாநிலங்களில் உள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை லோன் வழங்கி, ஒரு வாரத்தில் 36 விழுக்காடு வட்டியுடன் பணம் கட்ட வேண்டும் என மிரட்டி பல கோடி வசூலித்து வந்தது தெரியவந்தது. அந்த வகையில் 25 போலி ஆன்லைன் கடன் வழங்கும் மோசடி ஆப் மூலம் ரூ.300 கோடிக்கு மேல் பணம் வசூலித்ததும் கடன் பெற்றவர்களை மிரட்டி வந்ததும் தெரியவந்தது.

அதைதொடர்ந்து மோசடி கால் சென்டர் நடத்தி வந்த பிரமோதா மற்றும் பவான் ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின் படி போலி கால் சென்டர் இயக்குநர்களாக இருந்த சீனா நாட்டை சேர்ந்த ஜீ யோ யமாவோ, வூ யானுலம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 20 லேப்டாப்புகள், ஏடிஎம் கார்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அவர்கள் பயன்படுத்தி வந்த ஐசிஐசிஐ வங்கியில் உள்ள ரூ.48 லட்சம் பணம், ஆர்பிஐ வங்கியில் இருந்த ரூ.1.96 கோடி பணம் முடக்கப்பட்டது. பின்னர் மோசடியில் கைது செய்யப்பட்ட 2 சீனர்களிடம் நடத்திய விசாரணை குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் கூறியதாவது:

"கொரோனா ஊரடங்கின் போது மக்கள் வேலை இன்றி வீட்டில் இருக்கும் போது, இந்தியாவில் சட்ட விதிகளுக்கு புறம்பாக ஆன்லைன் மூலம் லோன் வழங்கும் ஆப்புகளை சீனாவை சேர்ந்த ஹாங்க் என்பவர் உருவாக்கி பல நாடுகளில் சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்துள்ளனர். இந்தியாவில் இவர்கள் உருவாக்கிய ஆப்புகளில் அதிக அளவில் மக்கள் பணம் கடன் வாங்கினர். இதனால் சீனாவை சேர்ந்த ஜீ யோ யமாவோ, வூ யானுலம் ஆகியோர் சிங்கப்பூர் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்து பெங்களூரை தேர்வு செய்து கடன் வழங்கவும், கடனை வசூலிக்கவும் 'ட்ரூ கின்டில் டெக்னாலஜி பிரைவேட் லிமிெடட்' என்ற பெயரில் கால் சென்டர் தொடங்கினர்.

இந்த கும்பல் இந்திய சட்ட விதிகளுக்கு முரணாக 25 கடன் வழங்கும் ஆப்புகளை உருவாக்கி மோசடி செய்துள்ளனர். இதுபோன்ற ஆன்லைன் கடன் வழங்கிய மோசடியில் டெல்லி உட்பட பல்வேறு இடங்களில் 5 சீனர்கள் கைது செய்யப்பட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் உருவாக்கிய ஆப் மூலம் கடன் வாங்கிய நபர் தனது வங்கி உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றியுள்ளதை வைத்து கொண்டு வங்கி கணக்கை முடக்கி விடுவதாகவும் மிரட்டி பணம் பறித்து வந்துள்ளனர். சென்னை உட்பட தமிழகம் முழுவதும் இந்த மோசடி கும்பலின் ஆப் மூலம் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடன் வாங்கி தங்களது பணத்தை இழந்து இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த ஆன்லைன் மோசடியில் கிடைத்த பல கோடி ரூபாயை சீனர்கள் இந்தியாவில் பல முன்னணி கட்டுமான நிறுவனங்களில் முதலீடு செய்தும், அந்த நிறுவனங்களில் முக்கிய பதவிகளில் இருந்து வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே இந்த மோசடியில் சீனர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து பின்னணியில் உள்ள நபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்த கைது செய்யப்பட்டுள்ள 2 சீனர்களை 10 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். அதற்கான பணிகள் தற்போது நடந்து வருகிறது. மேலும், ஆன்லைன் மூலம் கடன் வழங்கும் 25க்கும் மேற்பட்ட ஆப்புகளை தடை செய்ய 'கூகுள்' நிறுவனத்திற்கும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இவர்கள் உருவாக்கிய ஆப் மூலம் கடன் வாங்கிய நபர் தனது வங்கி உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றியுள்ளதை வைத்து வங்கி கணக்கை முடக்கி விடுவதாகவும் மிரட்டி பணம் பறித்து வந்துள்ளனர்.

-சுரேந்தர்.

Comments