ஆன்லைன் நிறுவனம் நடத்தி ரூ.2½ கோடி மோசடி செய்தவர் கைது!!

      -MMH

     கோவை: ஆன்லைன் நிறுவனம் நடத்தி ரூ.2½ கோடி மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி ரெயில்வே பீட்டர் ரோடு அண்ணாநகரை சேர்ந்தவர் ஜெகதீஸ் (37). இவர் கடந்த 2015-ம் ஆண்டு கோவை சரவணம்பட்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். அதே தனியார் நிறுவனத்தில் கோவை சர்க்கார் சாமக்குளம் கள்ளிபாளையத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவரும் பணியாற்றினார்.

இதனால் சிவக்குமாருக்கு ஜெகதீசுடன் நட்பு கிடைத்தது. இதனால் சிவக்குமாரிடம் ஜெகதீஸ் தான் ஆன்லைன் டிரேடிங் நிறுவனம் நடத்தி வருவதாகவும், அதில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டித்தருவதாகவும் ஆசை வார்த்தை கூறி உள்ளார்.

அதை உண்மை என நம்பிய சிவக்குமார் தான் மட்டுமின்றி தனக்கு தெரிந்தவர்களையும் ஆன்லைன் டிரேடிங் நிறுவனத்தில் இணைத்து மொத்தம் ரூ.2 கோடியே 60 லட்சத்து 50 ஆயிரத்தை முதலீடு செய்து உள்ளனர். மேலும் ஜெகதீஸ் பழனியை சேர்ந்த நாகேந்திரம் என்பவரிடம் ரூ.50 லட்சம் பெற்று உள்ளார். இதுபோன்று அவர் சென்னை, மதுரை, திருத்தணி உள்பட பல்வேறு இடங்களில் பலரிடம் பல கோடி பெற்று மோசடி செய்துவிட்டு தலைமறைவானார்.

இது குறித்து சிவக்குமார் அளித்த புகாரின் பேரில் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்ததனர். தலைமறைவான ஜெகதீசை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு அருளரசு உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர், இன்ஸ்பெக்டர் யமுனாதேவி, சப்-இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை தலைமையில் விஜயகுமார், உமா சங்கர் கணேஷ் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்தநிலையில் ஜெகதீஸ் நாகர்கோவிலில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் நாகர்கோவில் விரைந்து சென்று நேற்று ஜெகதீசை கைது–செய்து கோவை அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

-சீனி, போத்தனூர்.

Comments