கோவை மாநகராட்சி நிர்வாகத்தை கடுமையாக சாடிய திமுக எம்.எல்.ஏ...!!

-MMH 

கோவை மாநகராட்சி நிர்வாகம் இனியும் தூங்கி வழியாமல் , போர்க்கால அடிப்படையில், கோவையில் உள்ள அனைத்து  நீர் வழித் தடங்களையும்  தூர் வாரும் பணிகளை மேற்கொண்டு, மக்களை பாதுகாப்பதற்கு  உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள  வேண்டும். 

கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம் எல் ஏ கடும் கண்டனம்., நேற்று பெய்த கடும் மழையில் கோவை மாநகராட்சி பகுதிக்குட்பட்ட இடங்களில் இருக்கும் கீழ்க்கண்ட  நீர்வழித் தடங்கள் அனைத்தும் புதர்கள்,  குப்பைகள் , பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்து , அடைத்துக்கொண்டு  , நீர் செல்ல முடியாமல் ஆங்காங்கே தேங்கி, வீடுகளுக்குள் புகுந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். 

இந்த கீழ்க்கண்ட நீர் வழித் தடங்கள் அனைத்தும்  சரி வர தூர் வாரி சுத்தம் செய்யப்படாததால் ,  துர்நாற்றம் , கொசுக்கள் உற்பத்தி ஆகி டெங்கு , பன்றிக்காய்ச்சல் போன்ற பல்வேறு வகையான மர்மக் காய்ச்சல்கள் பரவக்கூடிய அபாய நிலை உள்ளது. சுகாதார சீர்கேட்டின் ஓட்டுமொத்த இருப்பிடமாக கோவை மாநகராட்சி திகழ்கிறது. கோவை மாநகராட்சி , மழை வருவதற்கு முன்னரே முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் , மக்கள் பாதிப்புக்குப் பிறகும்  வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

1)நொய்யல் ஆறு பாயும்  நீர்வழித் தடங்கள் அனைத்தும் குப்பைகள், ஆகாயத் தாமரை உள்ளிட்ட  புதர்கள் மண்டிக் கிடக்கின்றன.

2)அவினாசி சாலை பீளமேடு புதூர் SMS ஹோட்டல் எதிரில் இருந்து பீளமேடு புதூர் , திருமகள் நகர் , உடையாம்பாளையம் , சௌரிபாளையம் வழியாக செல்லக் கூடிய  பெரிய சங்கனூர் கிளை ஓடை ,

3)75 வது வட்டம் சாரமேடு பகுதியில் தொடங்கி  நஞ்சுண்டாபுரம் வழியாக செல்லக்கூடிய ராஜவாய்க்கால் ஓடை ,

4)58வது வட்டம் நீலிக்கோணாம்பாளையம் இந்திரா கார்டன் முதல் ஸ்ரீனிவாசா கார்டன் , விஜயலட்சுமி நகர் , குச்சி நாயக்கர்  லே அவுட் வழியாக செல்லும் பெரிய ஓடை ,

5) சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகில் திருச்சி சாலை கடந்து வெள்ளலூர் நொய்யல் ஆற்றுக்கு செல்லக்கூடிய ஓடை,

6)கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள சித்தா புதூர் ஜவஹர் நகர் மேற்குப்புறமாக உள்ள சங்கனூர் ஓடை,கிளை ஓடை

7)செல்வசிந்தாமணி குளத்திலிருந்து உக்கடம் பெரியகுளம் செல்லும் ஓடை,

8)வாலாங்குளத்திலிருந்து சங்கனுார் ஓடைக்கு செல்லும் ஓடை,

9) அவினாசி சாலை ரங்கவிலாஸ் மில் பகுதியில் இருந்து பன் மால்,  ஜி வீ ரெசிடென்சி வழியாக செல்லக்கூடிய ஓடை,

ஆகிய  ஓடைகள் உட்பட கோவை மாநகராட்சி பகுதியில் இருக்கும் அனைத்து ஓடைகளும் , நீர்நிலைகளும் மாநகராட்சி பொறியாளர்களை வைத்து ஆய்வு செய்து, தூர் வாருவதற்கும், நீர் நிலைகளைத் சீர்படுத்துவதற்கும், மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த 5 ஆண்டுகளாக , ராஜ வாய்க்கால் , சங்கனூர் ஓடைகள், கிளை ஓடைகள், மற்றும் நகருக்குள் இருக்கும்  அனைத்து நீர்வழித் தடங்கள்  தூர் வரப்பட வேண்டும் என்றும் ,மழைநீர் வடிகால்கள் தூர் வாரப்பட வேண்டும் என்றும்  பொதுமக்களையும் அழைத்துக் கொண்டு,  கோவை மாநகராட்சி ஆணையாளரிடத்தில், நேரில் சென்று சந்தித்து நூற்றுக்கும்   மேற்பட்ட முறை கடிதம் கொடுத்தும், இந்த அடிமை அரசு கண்டுகொள்ளவில்லை. பல்வேறு நோய்களை பரப்புகின்ற படு கேவலமான இருப்பிடமாக  மேற்காணும் ராஜவாய்க்கால் ,சங்கனூர் ஓடைகள், கிளை ஓடைகள் , அனைத்து மழை நீர் வடிகால்கள் இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. இவ்வாறு சுகாதார சீர்கேடு மிக்க நகரமாக இருப்பதற்கு இந்த அரசுதான் காரணம்

தொடர் மழையின் காரணமாக  ,  கோவை மாநகராட்சி பகுதிகளில் உள்ள சங்கனூர் ஓடைகள், கிளை ஓடைகள் , நொய்யல் ஆற்றின் கிளை ஓடைகள், நகருக்குள் இருக்கும் ஓடைகளின் கரைகள் உடைந்து, பல இடங்களில் மிக சாதாரணமான ஏழை, எளிய  மக்கள் வசிக்கின்ற வீடுகளுக்குள் சாக்கடை நீர் உடன் மழை நீரும் கலந்து புகுந்து விடிய விடிய தூங்காமல் குழந்தைகளுடன், வயதானவர்கள் , உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுடன் பொது மக்கள் பரிதவித்து வருகிறார்கள்.

இதையெல்லாம் சீரமைக்க வேண்டிய உள்ளாட்சித்துறை செயலிழந்து முடங்கிக் கிடக்கிறது. உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு மக்கள் எப்படி பரிதவித்தால் எனக்கென்ன என்பது போல , இதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் , எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் , தனக்கு எந்த பணிகளில் லாபம் வருமோ , அந்த பணிகளில் மட்டும் தனது பினாமி ஒப்பந்ததாரர்களை வைத்து ஊழல் முறைகேடுகள் செய்வதில் மட்டும் தான் கவனம் செலுத்தி வருகிறார்.

மழை வருவதற்கு முன்பே  எந்த ஒரு முன் எச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல் , மக்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் இருக்கும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியையும்  மற்றும் செயலற்று, கிடக்கும் , தூங்கி வழியும் கோவை மாநகராட்சி நிர்வாகத்தையும் கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ஆகவே,  பொதுமக்களின் நலன் கருதி , கோவை மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் அனைத்து  நீர் வழித் தடங்களையும்  தூர் வாரும் பணிகளை இனியாவது மேற்கொண்டு, மக்களை பாதுகாப்பதற்கு  உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள  வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு நா.கார்த்திக் எம் எல் ஏ மாவட்ட பொறுப்பாளர் கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக.

S.கிரி, தலைமை நிருபர்.

Comments