பாலியல் அரக்கனுக்கு கத்தியால் பதில் சொன்ன பத்ரகாளி விடுதலை! காவல்துறை அறிவிப்பு!
திருவள்ளூர் அருகே கத்திமுனையில் பலாத்காரம் செய்ய முன்றவனிடம் இருந்து தன்னை காத்துக் கொள்ள, அதே கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு போலீசில் சரணடைந்த இளம்பெண், தற்காப்பு நடவடிக்கை என்ற பிரிவின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த அல்லிமேடு கிராமத்தை சேர்ந்தவர், தாய் தந்தையை இழந்த இளம்பெண் கவுதமி. இவர் உறவினர் வீட்டில் தங்கியிருந்த நிலையில் சம்பவத்தன்று இயற்கை உபாதையை கழிக்க சென்ற கவுதமியை பின் தொடர்ந்து சென்ற உறவினரான அஜீத் என்பவர், கத்திமுனையில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.
உயிரை காப்பாற்றை நடந்த போராட்டத்தில், போதையில் இருந்த அஜீத்தின் கைகளில் இருந்த கத்தியை பறித்த கவுதமி, ஆவேசம் கொண்ட பத்ரகாளியாக மாறி அவனை குத்தி வதம் செய்தார். கத்தியுடன் சோழாவரம் காவல் நிலையத்தில் சரண் அடைந்த கவுதமி, அத்துமீறிய உறவினரிடம் இருந்து தன்னை தற்காத்துக் கொள்வதற்காக நடந்த போராட்டத்தில், அஜீத்தை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டதாக கூறி, கத்தியை போலீசாரிடம் ஒப்படைத்தார்.
வழக்கமாக கொலை சம்பவம் நிகழ்ந்து விட்டால் காவல்துறையினர் 302 வது சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கொலையாளியை கைது செய்வது வழக்கம். ஆனால் இந்த சம்பவத்தில் தன்னுடைய உயிரையை காப்பாற்றிக் கொள்வதற்காக இளம் பெண்ணால் நிகழ்த்தப்பட்ட கொலை சம்பவம் என்பதால் இதனை கொலையாக கருத இயலாது என்று அறிவித்துள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன், கவுதமியை கைது செய்யாமல் விடுவித்திருப்பதாக அறிவித்துள்ளார்
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக முதலில் 302 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் அதனை மாற்றி தற்காப்புக்காக நடந்த கொலை சம்பவம் என்று இந்திய தண்டனை சட்டம் 100 வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தன்னுடைய உயிரை காப்பாற்றிக் கொண்ட கவுதமிக்காக நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார்
மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாரட்டுக்கள் குவிந்து வருகின்றது..! அதே நேரத்தில் பாலியல் அரக்கர்களுக்கு அஞ்சி நடுங்கிய பெண்களுக்கு மத்தியில், பாலியல் அரக்கனுடன் போராடி அவன் கையில் இருந்த ஆயுதத்தால் அவனை வீழ்த்தி மற்ற பெண்களுக்கு வீரத்தால் வழிகட்டியுள்ள கவுதமி நிகழ்கால பத்ரகாளி என்றால் மிகையல்ல!
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-பாரூக்.
Comments