ராமர் கோவில் நிதி சேகரிப்பு பணி - சேவாபாரதி இன்று துவக்கம்!

 

-MMH 

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகளுக்கு, இன்று முதல் தமிழகத்தில் நன்கொடை பெறவுள்ளதாக, 'சேவாபாரதி' தெரிவித்துள்ளது.

சேவாபாரதி தேசிய தலைவர் பன்னலால் பன்சாலி கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது: கல்வி, மருத்துவம் உள்ளிட்டவற்றில் சிறந்த சேவை புரிவதுடன், பேரிடர் காலங்களில் சமூக பணிகளிலும், சேவாபாரதி ஈடுபட்டு வருகிறது. கொரோனா சமயத்தில் உணவின்றி தவித்தவர்களுக்கு, தினமும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணவுப் பொட்டலங்கள், கோவையில் இலவசமாக வழங்கப்பட்டன.

நாடு முழுவதும் செயல்படும், 92 ஆயிரத்து, 656 ராஷ்ட்ரிய சேவா மையங்கள் வாயிலாக கொரோனா காலத்தில், 73 லட்சத்து, 81 ஆயிரத்து, 800 குடும்பங்களுக்கு உணவு மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகளும் செய்யப்பட்டன.

சேவாபாரதி மருத்துவ மையங்கள் வாயிலாக இலவச மருத்துவம் வழங்கப்படுகிறது. பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளில் மருத்துவ மையங்கள் அமைத்து இலவச மருத்துவம், ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளன.அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவில், 1,000 ஆண்டுகள் ஆயினும் உறுதியுடன் இருக்கும் வண்ணம் வடிவமைக்கப்படுகிறது.

உலகளவில் போற்றப்படக்கூடிய அளவில் திகழவிருக்கும் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு நாளை (இன்று) முதல் தமிழகத்தில் இருந்து நன்கொடைகள் பெறவுள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.சேவாபாரதி மாநிலத் தலைவர் ராமநாதன், பொதுச்செயலாளர் சின்னபாலன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

-சுரேந்தர்.

Comments