பொன்னமராவதியில் கஞ்சா விற்பனை மற்றும் சூதாட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை!! - காவல்துறை அறிவிப்பு!
பொன்னமராவதி: ஜன-09 புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பகுதியில் கஞ்சா விற்பனை மற்றும் சூதாட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் ஆங்காங்கே எச்சரிக்கை பலகை வைத்ததுடன் செயல்படுத்தியும் வருகின்றனர்.
அந்தவகையில் பொன்னமராவதி காவல்துறை கண்காணிப்பாளர் செங்கமலக்கண்ணன் தலைமையில் பொன்னமராவதி தாலுகா அலுவலகம் அருகே வாகனத்தணிக்கையில் ஈடுபட்ட போது பாண்டியன் என்பவரிடம் அரை கிலோ கஞ்சாவும், ஜெ.ஜெ.நகரில் செல்வராஜ் என்பவரிடம் 100 கிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டது. அவர்களை விசாரித்தபோது புதுக்கோட்டையை சேர்ந்த ஜெயராம் என்பவரிடமிருந்து 3 1/2 கிலோ கஞ்சா வாங்கியது தெரியவந்தது. அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு அறந்தாங்கி சிறையில் அடைக்கப்பட்டனர்.
அதனைத்தொடர்ந்து தனிப்படையினர் மீமிசல் பேருந்து நிலையம் அருகில் மதுரையிலிருந்து கடத்தி கொண்டுவரப்பட்ட 4 கிலோ கஞ்சாவை கணேசன் என்பவரிடமிருந்து கைப்பற்றி, அவரையும் அறந்தாங்கி சிறையில் அடைத்துள்ளனர்.
இதேபோல் அரிமளம் காவல்சரகத்தில் ஆனந்த் என்பவரது கூடத்தில் பணம் வைத்து சட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுபட்ட
9 நபர்களை கைது செய்ததோடு அவர்களிடமிருந்து ₹.37,990 பணத்தைக் கைப்பற்றியதோடு அவர்களது கார், இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இவ்வாறாக குற்றச்செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்த காவல் அதிகாரிகளை புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டினார்.
காவல் துறையினரின் இந்த நடவடிக்கை பொன்னமராவதி சுற்றுவட்டார பகுதிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவோர் மற்றும் கஞ்சா விற்போர் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
- M.சதாம் உசேன், பொன்னமராவதி.
Comments