வறுமையில் வாடுகிறதா தேசிய நெடுஞ்சாலைத்துறை? தேவகோட்டையில் சாலைகளை சீர்செய்ய முடியாத அவலம்!
தேவகோட்டையில் தேசிய நெடுஞ்சாலைத்துறையைக் கண்டித்து தமிழக மக்கள் மன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேவகோட்டையின் மையப்பகுதியில் அமைந்துள்ள தேவகோட்டை - திருப்பத்தூர் சாலை, கடந்த பல ஆண்டுகளாகச் சீர்குலைந்து குண்டும் குழியுமாகக் கிடக்கிறது. இதனால் தினம்தோறும் பல்வேறு விபத்துகள் நடந்து வருகின்றன. இந்தச் சாலையை உடனடியாகச் சீரமைக்கக் கோரி தமிழக மக்கள் மன்றத்தின் ஏற்பாட்டில் அனைத்து அரசியல் கட்சிகள், சமூக நல இயக்கங்களை ஒருங்கிணைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்று நடத்திய மக்கள் மன்றத் தலைவர் ச.மீ.ராசகுமார் பேசியபோது, "இந்தச் சாலையினைச் சீரமைக்கக் கோரி காரைக்குடியில் உள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளைச் சந்தித்து புகார் அளித்தோம். அதற்கு அவர்கள் இந்தச் சாலையை சீர்செய்ய தேசிய நெடுஞ்சாலைத்துறையிடம் பணம் இல்லை என்றும், எனவே சாலையை மாநில நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்கப்போவதாகவும், அதன்பிறகு அவர்கள்தான் புதிய சாலை போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தனர். அப்படியெனில் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு இந்த சாலையினைப் போடமுடியாது எனில் அதற்குள் எத்தனை உயிர்கள் பலியாகும் என்று சொல்லமுடியாது.
எனவே மதுரை, சென்னை, டெல்லி என அனைத்து தலைமை தேசிய நெடுஞ்சாலைத்துறை தலைமை அதிகாரிகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளோம். ஆனாலும் இன்னும் நடவடிக்கை எடுக்காததால் இன்று பெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருக்கிறோம். இனியும் அவர்கள் தாமதித்தால் அவர்களின் அலுவலகத்தை பூட்டும் போராட்டத்தை முன்னெடுப்போம்" என்றார்.
இந்த போராட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் தேர்போகி பாண்டி, மக்கள் நீதி மய்யத்தின் மாவட்டச் செயலாளர் கமல்ராஜா, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நகரச் செயலாளர் காமராஜ், மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சியின் நகரச் செயலாளர் பொன்னுச்சாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நகரச் செயலாளர் அமுதன், ஆம் ஆத்மி சோமன், மனித நேய மக்கள் கட்சி முகம்மது, தமிழர் பண்பாட்டு மன்றம் பிச்சை, நாம் தமிழர் கட்சி தமிழன் ரபீக், இனங்களின் இறையாண்மைக்கான இளைஞர் மாணவர் இயக்கம் பாவல், பச்சைத்தமிழகம் கார்த்திக் ஆகியோர் கலந்துகொண்டுகண்டன உரையாற்றினார்கள். தேவகோட்டை மக்கள் மன்ற ஒருங்கிணைப்பாளர் வினோத் நன்றி தெரிவித்தார்.
- சங்கர், தேவகோட்டை.
Comments