டெல்லி விவசாயிகள் டிராக்டர் பேரணி! போலீஸ் தடுப்புகளை உடைத்துக் கிளம்பியது! கண்ணீர் புகை குண்டு வீச்சு!

-MMH

டெல்லி விவசாயிகள் டிராக்டர் பேரணி! போலீஸ் தடுப்புகளை உடைத்துக் கிளம்பியது! கண்ணீர் புகை குண்டு வீச்சு!

குடியரசு தினத்தில் டெல்லியில் விவசாயிகள் நடத்தத் திட்டமிட்ட டிராக்டர் பேரணி போலீசார் வைத்த தடுப்பரண்களை உடைத்துக் கொண்டு டெல்லிக்குள் நுழைந்தன. போலீசார் பல இடங்களில் கண்ணீர் புகை குண்டுகளை வீசுகின்றனர்.

சுமார் 6-7 இடங்களில் இருந்து தனித்தனியே புறப்பட்ட டிராக்டர் பேரணிகளில் ஒன்று பகல் சுமார்

12 மணி அளவில் மத்திய டெல்லியின் ஐ.டி.ஓ. பகுதி வரை வந்துவிட்டது. டிக்ரி எல்லையில் இருந்து புறப்பட்ட பேரணியின் நீளம் மட்டும் 30 கிலோ மீட்டருக்கு மேல் இருக்கும் என்பதாக விவசாயிகளை மேற்கோள் காட்டி சொல்கிறார் பிபிசி செய்தியாளர்.

கைகலப்பு

ஐ.டி.ஓ. பகுதியில் போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இதில் காவல்துறையினர் மற்றும் விவசாயிகள் என இரண்டு தரப்பை சேர்ந்த சிலருக்கு காயம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போராட்டத்தில் இருந்தவர்கள் ஒரு டெல்லி போக்குவரத்துக் கழகப் பேருந்து ஒன்றை அடித்து உடைத்து, கவிழ்க்க முயற்சித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இதே ஐ.டி.ஓ. பகுதியில் போராட்டத்தில் பங்கேற்றுள்ள சிலர் வேண்டுமென்றே காவல்துறையினரை அச்சுறுத்தும் நோக்கில் அவர்களை நோக்கி டிராக்டர்களை ஓட்டியதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

வெவ்வேறு இடங்களில் இருந்து புறப்பட்ட பல்வேறு குழுக்களில் இரண்டு குழுக்கள் மட்டும் "பேரணியை ஒப்புக்கொண்டபடி வெளிப்புற சுற்றுச் சாலையில் மட்டும் நடத்துவோம். குடியரசு தின அணிவகுப்புக்கு குந்தகம் விளைவிக்க மாட்டோம். பேரணி முடிந்த பிறகு எல்லைப் பகுதிக்கே திரும்பிச் செல்வோம்" என்று பிபிசியிடம் தெரிவித்தன. இந்தப் பதற்ற நிலை காரணமாக, டெல்லியில் பல மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன.

ஆனால், இந்தப் பேரணியை நாங்கோலி - நஜஃப்கர் சந்திப்பில் பேரணியை விவசாயிகளே நிறுத்திவிட்டதாக செய்தியாளர்கள் கூறுகிறார்கள். விவசாயிகள் கையில் தேசியக் கொடியோடு வந்திருக்கிறார்கள். பேரணியில் மோதல் ஏதும் இல்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

கண்ணீர் புகை குண்டு வீச்சு!

சிங்கு எல்லையில் இருந்து புறப்பட்ட விவசாயிகள் மீது சஞ்சய் காந்தி டிரான்ஸ்போர்ட் நகர் அருகே போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதாக சொல்லப்படுகிறது.

அதே போல காசிபூசிர் எல்லை வழியாக டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியது போலீஸ். டெல்லி - நொய்டா, டெல்லி - காசியாபாத் சாலைகளில் அக்ஷரதாம் கோயில் அருகே போலீஸ் கண்ணீர் புகை குண்டுகளை வீசும் படங்கள் வெளியாகியுள்ளன.

விவசாய சட்டங்களை எதிர்த்து!

இந்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி கடந்த 2 மாதங்களாக டெல்லி எல்லைப் பகுதிகளில் நெடுஞ்சாலைகளை மறித்துப் போராடி வரும் விவசாயிகள் குடியரசு தினத்தில் இந்தியத் தலைநகரில் டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டனர்.

முதலில் இந்தப் பேரணியைத் தவிர்க்க நினைத்தது அரசு. ஆனால், சில நாள்களுக்கு முன்பு டெல்லி போலீசார் இந்தப் பேரணிக்கு அனுமதி அளித்தனர். எனினும், டெல்லி குடியரசு தின அணி வகுப்பு முடிந்த பிறகு 10 மணிக்கு மேல்தான் இந்தப் பேரணி தொடங்க வேண்டும் என்று போலீசார் நிபந்தனை விதித்திருந்தனர்.

சிங்கு, டிக்ரி உள்ளிட்ட விவசாயப் போராட்டங்கள் பெருமளவில் நடக்கும் எல்லைப் பகுதிகளில் இருந்துதான் இந்த டிராக்டர்கள் டெல்லிக்குள் வரவேண்டும். ஆனால், இந்த எல்லைப் பகுதிகளில் போலீசார் பெரிய தடுப்பரண்களை உருவாக்கி வைத்தனர்.

சாலையின் நடுவில் வைக்கும் காங்கிரீட் பிளாக்குகளையும், மண் ஏற்றிய டாராஸ் போன்ற லாரிகளையும் சாலையின் குறுக்கே நிறுத்தி வைத்தனர். "ஜேசிபி போன்ற மண் வாரி இயந்திரங்களும், பல வாகனங்களும் சாலையில் நிறுத்தப்பட்டன" என்கிறார்கள் டிக்ரி எல்லையில் இருக்கும் செய்தியாளர்கள்.

கிரேன்கள் உதவியோடு தடுப்பரண்கள் உருவாக்கப்பட்டன. சாலைகளில் பயன்படுத்தும் பேரிகேடுகளும் தடுப்பரண்களில் பயன்படுத்தப்பட்டன.

தடுப்பரண்கள் உடைத்துக் கிளம்பிய பேரணி!

ஆனால், குறிப்பிடப்பட்ட காலை 10 மணிக்கு முன்னதாகவே விவசாயிகள் தடுப்பரண்களை உடைத்துக்கொண்டு தங்கள் டிராக்டர்களோடு எல்லையைக் கடந்து டெல்லிக்குள் நுழைந்தனர். டிக்ரி எல்லைப் பகுதியில் போலீஸ் தடுப்பரண்களை விவசாயிகள் உடைத்தெறிந்தனர்.

30 கிலோ மீட்டருக்கு மேல் நீளும் பேரணி!

இந்தப் பேரணி எவ்வளவு தூரம் நீள்கிறது என்பதைப் பார்க்க முடியவில்லை என்று கூறும் செய்தியாளர்கள், அது 30 கிலோ மீட்டருக்கு மேல் நீளமாக இருக்கும் என்று தெரிவிக்கிறார்கள்.

சாலையின் ஒரு பக்கத்தில் டிராக்டர்கள் அணி வகுப்பதாகவும், மறுபக்கத்தில் விவசாயிகள் நடந்து வருவதாகவும் அவர் கூறுகிறார்கள். இது தவிரவும், டிராக்டர்களில் நிறைய விவசாயிகள் நெருக்கியடித்துக்கொண்டு அமர்ந்திருப்பதைக் காட்டுகின்றன டிராக்டர் பேரணியில் இருந்து வரும் படங்கள்.

அமைதிகாக்க சொல்லும் விவசாய சங்கம்!

முன்னதாக "இந்தப் பேரணியின்போது விவசாயிகள் அமைதியைக் கடைபிடிக்கவேண்டும். இது போராட்டத்தின் கடைசி நாளல்ல என்பதை நினைவில் கொள்ளவேண்டும். விஷமிகள் ஊடுருவி பேரணிக்கு கெட்ட பேரை ஏற்படுத்தலாம். அதைப்போன்ற சக்திகளை அடையாளம் கண்டு விலக்கி வைக்கவேண்டும். அமைதியைக் கடைபிடிக்கவேண்டும்" என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிசான் ஏக்தா மஞ்ச் என்ற விவசாயிகள் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-பாரூக்.

Comments