வரவு - செலவு கணக்குகளை மக்களிடம் வெளிப்படையாக சமர்ப்பித்த ஊராட்சி மன்றத்தலைவர்! குவியும் பாராட்டு!

-MMH

வாராப்பூர் கிராமம் சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், எஸ்.புதூர் ஒன்றியத்தில் உள்ளது. உள்ளாட்சி மன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, மக்களிடையே  அரசு பணியை செய்திடஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்க மாட்டோம் என்றும், ஒவ்வோராண்டும் ஊராட்சி மன்றத்தின் வரவு செலவு கணக்குகளை வெளிப்படையாக மக்களுக்கு வழங்குவோம் என்றும் வாக்குறுதி அளித்தார், வாராப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட மலர்விழி நாகராஜன்.

அதன்படி அளித்த வாக்குறுதியை செயல்படுத்தும் வண்ணம் வாராப்பூர் ஊராட்சியில் உள்ள முருகன் கோவிலில் வைத்து, உலகம்பட்டி காவல் ஆய்வாளர் ரமேஷ் முன்னிலையில் ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து கிராம மக்களிடமும் ஊராட்சியில் கடந்த ஒரு வருடத்திற்கான வரவு செலவு கணக்கை பகிரங்கமாக ஊராட்சி மன்றத் தலைவர் மலர்விழி நாகராஜன் வெளியிட்டார். மேலும், அதன் நகல்கள் அனைத்து வீடுகளுக்கும் சென்றடையும்படி ஏற்பாடு செய்திருந்தார்.

இதுபற்றி அவர் கூறுகையில், 'நேர்மையாகப் பணியாற்றும் ஒரு அரசு அலுவலருக்கு இதன் முதல் பிரதியை வழங்க வேண்டும் என்ற நோக்கில் உலகம்பட்டி காவல் ஆய்வாளராக பணியாற்றி வரும் சாதுரமேசுக்கு இதன் முதல் பிரதியை வழங்கியதாகவும்' தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில்  துணைத்தலைவர் சித்ரா, செயலாளர் வெள்ளைச்சாமி, பொன்னமராவதி வி.என்.ஆர் நிறுவன உரிமையாளர் நாகராஜன், ராமையா, பொன்னுசாமி, சின்னையா, கருப்பையா, கணேசன், அழகப்பன், வாராப்பூர் சின்னையா, மணிகண்டன், வார்டு உறுப்பினர்கள் ஊர் பொதுமக்கள் என அனைவரும் பங்கேற்றனர். ஊராட்சிமன்றத் தலைவரின் இந்த செயலுக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள்  பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

-அப்துல்சலாம், திருப்பத்தூர்.

Comments