அமெரிக்க இதழில் பதிப்பாகும் தமிழக ஆராய்ச்சியாளரின் கட்டுரை!!

     -MMH

     கோவை:தமிழகத்தை சேர்ந்த பேராசிரியர் சக்திவேல் வையாபுரி மற்றும் அவரது குழு இணைந்து பாம்புக்கடி குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தியதும், பாம்புகள் குறித்த ஆராய்ச்சியும் ஆய்வுக்கட்டுரையாக அமெரிக்க இதழில் வெளியாகியுள்ளது, தமிழக மக்களை பெருமையடைய செய்துள்ளது.

சர்வதேச ஆய்வுகளின் படி, இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 58 ஆயிரம் பேர் பாம்புக்கடியால் உயிரிழந்து வருகின்றனர். சுமார் 2 லட்சம் மக்கள் கை அல்லது கால்களை இழந்து தவிக்கின்றனர். பாம்புகள் குறித்தும் பாம்புக்கடி சிகிச்சை குறித்தும் முழுமையான புரிதல் இல்லாததே இதற்கு முதன்மையான காரணமாக உள்ளது.

இந்த சூழலில், இங்கிலாந்தில் உள்ள ரெடிங் பல்கலைக்கழகத்தின் மருந்தியல் துறையில் பேராசிரியராக பணிபுரியும் தமிழகத்தை சேர்ந்த சக்திவேல் வையாபுரி, கிருஷ்ணகிரி TCR மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் சவுந்தரராஜ் மற்றும் ஸ்டீபன் பால் ஆகியோர் இணைந்து பாம்பு கடிகள் குறித்த விழிப்புணர்வை தமிழகம் முழுவதிலும் ஏற்படுத்தியுள்ளனர்

இதன் மூலமாக இரண்டு லட்சம் மக்களை நேரடியாகவும் மற்றும் சுமார் 28 லட்சம் மக்களை சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் தொடர்புகொண்டு பாம்புக்கடி பற்றிய முறையான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளனர்.  இதன் பலனாக பாம்புக்கடியால் பாதிக்கப்பட்ட மக்கள் உடனடியாக மருத்துவமனையை அடையும் சதவீதம் 60ல் இருந்து 95 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது.

இந்த சூழலில், இவர்கள் மேற்கொண்ட விழிப்புணவு  நிகழ்ச்சிகள் மற்றும் தகவல்கள் ஒருங்கிணைந்த ஆராய்ச்சிக் கட்டுரையாக அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற ஆராய்ச்சி இதழான பிலோஸ்  நெக்லெக்டெட் டிரோபிகல் டிசீஸ் (PLoS Neglected Tropical Diseases) இதழில் வெளியாகியுள்ளது.

குறைந்த செலவிலான இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளதாகவும், இது போன்ற பிரச்சாரத்தை அரசாங்கமும் மற்றும் சமூக நல ஆர்வலர்களும் மேற்கொண்டு, பாம்புக்கடி பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்று பேராசிரியர் சக்திவேல் வையாபுரி தெரிவித்துள்ளார்.

-சீனி,போத்தனூர்.

Comments