பள்ளிகள் திறப்பதற்கு பெற்றோர்கள் சம்மதமா..?

-MMH

கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. தற்போது தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த ஒன்பது மாதங்களாக, அதாவது கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி முதல் இன்று வரை தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது. சில மாதங்களுக்கு முன் தமிழக அரசு பள்ளிகளை திறப்பதற்காக பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தியது. 

அப்போது பெற்றோர்கள் அனைவரும் பள்ளிகளை தற்போது திறக்க வேண்டாம் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து பள்ளிகள் திறக்கும் தேதியை தமிழக அரசு தள்ளிவைத்தது. இந்நிலையில், தமிழக அரசு தற்போது மீண்டும் பள்ளி திறப்பதற்கு பெற்றோர்களிடம் கருத்து கேட்புக் கூட்டத்தை நடத்தி உள்ளது. பொங்கல் திருவிழா முடிந்த பின்னர் தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகளை திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

தற்போது நடக்கும் இந்த பெற்றோர்கள் கருத்து கேட்பு கூட்டத்தில், பெற்றோர்கள் தெரிவிக்கும் முடிவை பொறுத்து தமிழக அரசு பள்ளியை திறக்குமா அல்லது இன்னும் காலதாமதம் செய்யுமா என்று தெரியவரும். இந்த பெற்றோர் கருத்து கேட்பு கூட்டம் இன்று இரண்டாவது நாளாக நடைபெற்று முடிந்துள்ளது. இதில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று கருத்து கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது காரணமாக பள்ளி திறக்கலாம் என்று பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர். மேலும், திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கும்போது, ஏன் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இருப்பினும் நாளையும் பெற்றோர்களிடம் கேட்கப்பட்டு மாவட்டம் வாரியாக பள்ளிக்கல்வி இயக்குனருக்கு அனுப்பப்படும். அதன்பின், அரசுக்கு அது சமர்ப்பிக்கப்பட்டு தமிழக அரசு ஆலோசனை செய்து பள்ளிகள் திறப்பது குறித்து முடிவை அறிவிக்கும் என்று தெரிகிறது.

முன்னதாக வெளியான தகவலின்படி, இந்த ஜனவரி மாதம் மூன்றாம் வாரத்தில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படி பள்ளிகள் திறக்கப்படும் போது ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு பள்ளி வகுப்புகள் நடத்தப்படும் என்று தெரிகிறது.

-ஸ்டார் வெங்கட்.

Comments