புதுச்சேரியில் ஆரம்பப் பள்ளிகளுக்கு விலக்களிக்க வேண்டும்!!

 

-MMH

இறைவி குழுமம் சார்பாக காயத்ரி ஸ்ரீகாந்த் முதல்வர், கல்வித் துறை அமைச்சரிடம் மனு! புதுச்சேரியில் 9 மாதங்களுக்கு பிறகு 1 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. 18-ந் தேதி முதல் முழுநேரமும் செயல்பட உள்ளது.

பள்ளி திறப்பில் ஆரம்ப வகுப்புகளுக்கு விலக்களிக்கக் கோரி, இறைவி குழுமம் சார்பாக காயத்ரி ஸ்ரீராம் அவர்கள் முதல்வர் நாராயணசாமியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், 'பெற்றோரின் எழுத்துப்பூர்வமான சம்மதம் குறித்த கடிதம் பெறப்பட்டால் மட்டுமே மாணவர்களை பள்ளியில் அனுமதிக்க வேண்டும். தனியார் பள்ளிகளை திருப்திபடுத்த, பள்ளிகள் திறப்பதற்கான உத்தரவு குறித்து பெற்றோரிடம் ஆலோசனைகள் பெறாமல் புதுச்சேரி அரசு தன்னிச்சையாக வெளியிட்டுள்ளது பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆரம்ப பள்ளி மாணவர்களை அது வெகுவாக பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. 

ஒரு ரூபாய் பேருந்து இயக்கவதற்கு தொடர்பான உத்தரவு பின்னர் வெளியிடப்படும் என்று குறிப்பி்டிருப்பதும் மாணவர்களுக்கு தேவையான பாதுகாப்பான அரசின் போக்குவரத்தை உறுதி செய்யாமல் அவசரகதியில் பள்ளிகள் திறந்திருப்பது பல்வேறு நெருக்கடிகளை உருவாக்கும். 

தற்போதுள்ள சூழலில் ஆரம்ப பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு குறித்து வகுப்புகள் எடுத்தாலும் மாணவர்கள் ஒருவரோடு ஒருவர் உரசிக்கொண்டு செல்வதும் விளையாடுவதும் இயல்பான குழந்தைகளுக்கான மனநிலை. 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பிள்ளைகளுக்கு இதை செய் அதை செய்யாதே, தொடாதே! மாஸ்க் போடு! மூக்கை சொறியாதே! கண், மூக்கு வாய் தொடுவதை தவிர்கவும்னு சொல்லி கொடுத்தாலும் மாணவர்களால் அதை அவர்கள் கடைப்பிடிப்பது மிகவும் சிரமம். 

கொரோனா காலத்தில் பெற்றோர்களால் தங்களது பிள்ளைகளையே சமாளிக்க முடியவில்லை. ஒரு வகுப்பில் 30 மாணவர்களை வைத்து சமாளிப்பது பள்ளிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் மிகப்பெரிய சவால். கடலூர், விழுப்புரம் என பிற மாவட்டங்களில் இருந்து வந்து விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்களின் நிலை என்ன?  பள்ளிகளுக்கு ஆட்டோ, வேன், பொது பேருந்துகளில் வரும் மாணவர்களை குறித்த கவலை இந்த அரசாங்கத்திற்கு இல்லையா?

புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்வி தேவையை இந்த அரசு புறக்கணித்திருக்கிறது. என்ன பாடத்திட்டம்? எது தேர்வுக்குரியது? என்ன திட்டமிடலோடு மாணவர்களும் ஆசிரியர்களும் வகுப்புகளுக்கு தயாராக வேண்டும் என்ற தெளிவு கல்வித்துறைக்கே இல்லையெனும் போது, ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் எப்படி வரும்!

சந்தேக வகுப்புகளுக்காக பள்ளிகள் திறக்கலாம் என்ற முதல் அறிவிப்பு வந்த போது துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, கொரோனா குறித்த ஏற்பாடுகளை அதிகாரிகளிடம் உடையாடும் போது குழந்தைகளுக்கான சிறப்பு கொரோனா வார்டுகள் துவங்க வேண்டும் என்று குறிப்பிட்டதை நினைவு கூர்கிறேன்! இந்தச்சூழலில் பள்ளிகளை திறப்பது இன்னும் எங்களை வேதனையில் ஆழ்த்துகிறது. புதுவை அரசு தனது பொறுப்புகளில் இருந்து விலகி நிற்கவே பெற்றோரிடம் கையெழுத்து கேட்கிறது. இந்தச் சூழலை பயன்படுத்திக் கொண்டு தனியார் பள்ளிகளும், வருமானம் இழந்து தவிக்கும் பெற்றோரை கல்வி கட்டணம் செலுத்த சொல்லி நிர்பந்திக்கிறார்கள். 

வளரும் தலைமுறையின் ஆரோக்கியம் மீது உங்கள் அரசு கரிசனம் காட்ட வேண்டுகிறோம். லாக்டவுன் தொடங்கிய நாள் முதல் மாணவர்களின் அறிவுசார்ந்த நலனுக்காக இந்த அரசு பலவற்றை செய்யும் என எதிர்பார்த்தோம். ஆன்லைன் வகுப்புகளுக்கும் கட்டணம் வசூல், நோட் புக், பேக், ஷூ என அனைத்தையும் பள்ளியில் பல ஆயிரங்கள் சேர்த்து விற்கும் தனியார் பள்ளிகளை உங்கள் அரசு கட்டுப்படுத்த வேண்டுகோள் வைக்கிறோம். 

ஆன்லைனில் வகுப்புகள் எடுத்த தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு முறையாக சம்பளம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டுகிறோம். தயை கூர்ந்து 1-5 வகுப்பு வரை ஆரம்ப பள்ளிகள் திறந்தது குறித்து மறுபரிசீலனை செய்து மாணவர் நலனில் அக்கறை கொள்ள வேண்டுகிறோம்' என வலியுறுத்தியுள்ளார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-பாருக்.

Comments