மத்திய அரசு வழங்கும் இலவச சமையல் சிலிண்டரை வாங்குவது எப்படி..!

 

-MMH 

அதற்கான தகுதி என்ன போன்ற விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். பிரதான்மந்திரி உஜ்வாலா யோஜனா! வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருக்கும் பெண்களுக்கு உதவுவதற்காக 2016ஆம் ஆண்டு மே 1ஆம் தேதியன்று உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தை மோடி அரசு அறிமுகம் செய்தது.

நாடு முழுவதும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் குடும்பங்களுக்கு ஐந்து கோடி சமையல் சிலிண்டர் இணைப்புகள் வழங்கும் நோக்கத்தில் இத்திட்டம் உருவாக்கப்பட்டது. இத்திட்டத்திற்காக மத்திய அரசு ரூ.8,000 கோடியை ஒதுக்கியது. சுகாதாரமான எரிவாயுவை வழங்குவதே இத்திட்டத்தின் முக்கியமான நோக்கமாகும்.

யாருக்கெல்லாம்கிடைக்கும் இலவச சமையல் சிலிண்டர்..? இத்திட்டத்தின் கீழ் இலவச சமையல் சிலிண்டர் வாங்குவதற்கு வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த வயது வந்த பெண், ஏற்கெனவே சமையல் சிலிண்டர் இணைப்பு இல்லாதிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் இந்தியக் குடியுரிமை பெற்றிருக்க வேண்டும்.

பெண்ணின் பெயரிலேயே சிலிண்டர் இணைப்பு வழங்கப்படும். விண்ணப்பதாரர் வேறு எந்த சமையல் சிலிண்டர் திட்டத்திலும் பயனாளியாக இருக்கக்கூடாது. பட்டியல் வகுப்பு/பழங்குடியின குடும்பங்கள், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம், அந்த்யோத்யா அன்ன யோஜனா, காட்டு வாசிகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தேயிலை மற்றும் முன்னாள் தேயிலைத் தோட்ட பழங்குடியினர், நதியோர தீவுகளில் வசிக்கும் மக்கள் ஆகிய ஏழு பிரிவுகளின் கீழ் பயனாளிகள் கண்டறியப்படுகின்றனர்.

என்னென்ன ஆவணங்கள் தேவை? நகராட்சி தலைவர் (நகர்ப்புற பகுதி) அல்லது பஞ்சாயத்துத் தலைவர் (கிராமப்புற பகுதி) வழங்கிய வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களுக்கான சான்றிதழ். ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை, அனைத்து குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண்கள்.

அண்மையில் எடுத்த பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஜாதிச் சான்றிதழ், முகவரிக்கான ஆவணம், விண்ணப்பதாரரின் ஒப்புதல் கடிதம், ஜன் தன் வங்கிக் கணக்கு அல்லது வங்கி பாஸ்புக் ஆகியவற்றை ஆவணங்களாகச் சமர்ப்பிக்க வேண்டும். இத்திட்டத்திற்கான விண்ணப்பப் படிவத்தை நிரப்பி தேவையான ஆவணங்களுடன் அருகிலுள்ள கேஸ் ஏஜென்சியில் சமர்ப்பிக்க வேண்டும்.

விதிமுறைகள்! இலவச சமையல் சிலிண்டர் இணைப்பு பெறுவதற்கு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் அவசியமாகும். முதல் முறையாக சிலிண்டர் இணைப்பு பெறும்போது அதற்கான தொகை பயனாளியின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும். அதன் பின்னர் அவர் சிலிண்டருக்கான பணத்தைக் கொடுத்து சிலிண்டர் வாங்க வேண்டும்.

கொரோனா சமயத்தில் அறிவிக்கப்பட்டதின் படி, கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் 3 சிலிண்டர்கள் மட்டுமே இலவசமாக வழங்கப்படும்.  உஜ்வாலா திட்டத்தில் ஒரு மாதத்துக்கு ஒரு இலவச சிலிண்டர் மட்டுமே வாங்க முடியும். பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் நன்மைகள், எரிவாயு இணைப்புக்கு நிதி உதவியாக ரூபாய் 1600/- வழங்கப்படுகிறது.

எண்ணெய் நிறுவனங்களால் எரிவாயு அடுப்பு மற்றும் முதல் மறு நிரப்பல் எரிவாயு உருளை ஆகியவற்றை வாங்க வட்டி இல்லாத கடன் வழங்கப்படுகிறது. முதல்முறை செலுத்தும் ரூபாய் 1600/- ல் ஒரு எரிவாயு உருளை, pressure regulator, பாதுகாப்பு குழாய் (safety hose), கையேடு ஆகியவையும் அடங்கும்.

இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மட்டும் கடந்த ஆண்டு வரை 27 லட்சத்து 87 ஆயிரம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 25 ஆயிரம் இணைப்புகள் வழங்கப் பட்டுள்ளன.

-சுரேந்தர்.

Comments