புகழ்பெற்ற சிராவயல் மஞ்சுவிரட்டு! ஏராளமான காளைகள் களம் கண்டன!

     -MMH

     சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே புகழ்பெற்ற சிராவயல் மஞ்சுவிரட்டு இன்று நடைபெற்றது. இங்கு அரசியல் தலைவர்கள், மாவட்ட ஆட்சியர் பங்கேற்று மஞ்சுவிரட்டை கண்டு ரசித்தனர்.


சிராவயல் மஞ்சுவிரட்டிற்கு முன்னதாக பெரியநாயகி அம்மன், தேனாட்சி அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து முன்னோர் வழிபாட்டை முடித்து வாண வேடிக்கை, மேளதாளத்துடன் மஞ்சுவிரட்டு தொழுவுக்கு கிராம மக்கள் சென்றனர். தொழுவில் உள்ள மாடுகளுக்கு வேஷ்டி, துண்டு அணிவித்து மரியாதை செய்ததைத் தொடர்ந்து, கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. மற்ற காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

இந்த மஞ்சுவிரட்டில் சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மசதுசூதனன் ரெட்டி, திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் மற்றும் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் பங்கேற்று மஞ்சுவிரட்டை கண்டுகளித்தனர்.


தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாட்டினரும் பங்கேற்றனர். சிராவயல் மஞ்சுவிரட்டையொட்டி அக்கிராமத்தைச் சுற்றியுள்ள திருப்பத்தூர், பிள்ளையார்பட்டி, தென்கரை, அதிகரம், கிளாமடம், மருதங்குடி, கும்மங்குடி உள்ளிட்ட பகுதிகளும் விழாக்கோலம் பூண்டுள்ளது.


சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மஞ்சுவிரட்டில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்குவதற்காக ஏராளமான பரிசுகளை சிராவயல் மஞ்சுவிரட்டு விழாக் குழுவினரிடம் ஒப்படைத்தார்.

- அப்துல்சலாம், திருப்பத்தூர்.

Comments