போலீஸ் வலைவீசித் தேடிய பெண் தாதா புதுமைப்பெண் போல் பாஜகவில் இணைந்தார்..!

 

-MMH

எழிலரசி தேடப்படும் குற்றவாளி; எங்களிடம் ஒப்படையுங்கள்! பா.ஜ.கவைக் கேட்கும் புதுச்சேரி போலீஸ்! 

புதுச்சேரியின் நான்கு பிராந்தியங்களில் ஒன்றான காரைக்கால் திருமலைராயன்பட்டினத்தைச் சேர்ந்த சாராய வியாபாரி ராமு (எ) ராதாகிருஷ்ணனுக்கு வினோதா, எழிலரசி என இரண்டு மனைவிகள். 2013-ம் ஆண்டு கூலிப் படையினரால் ராமு படுகொலை செய்யப்பட்டுவிட, அதற்கு ராமுவின் முதல் மனைவி வினோதாவும், புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் வி.எம்.சி சிவக்குமாரும்தான் காரணம் என்று நினைத்தார் எழிலரசி.

தொடர்ந்து ராமுவின் கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த அய்யப்பன் மற்றும் ராமுவின் முதல் மனைவி வினோதா ஆகியோர் 2015ஆம் ஆண்டும், முன்னாள் சபாநாயகர் வி.எம்.சி சிவக்குமார் 2017ஆம் ஆண்டும் கூலிப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர். இந்தக் கொலைகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைதாகி பிறகு ஜாமீனில் வெளிவந்த எழிலரசி, 2018-ம் ஆண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

ஜாமீனில் வெளிவந்த அவர், காரைக்கால் நேதாஜி நகரில் வசித்து வந்தார். கடந்த ஆண்டு ஜனவரி 23-ம் தேதி சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடும் என்று கருதி அவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தற்போது சிறையில் இருந்து வெளிவந்த அவர், புதுச்சேரியில் பா.ஜ.க மாநிலத் தலைவர் சாமிநாதன் தலைமையில் அக்கட்சியில் இணைந்தார்.

அவரை புதுச்சேரி பாஜக தலைவர் சுவாமிநாதன், பொன்னாடை போர்த்தி வரவேற்றார். பின்பு, தனது ஆதரவாளர்களுக்கு இனிப்பு, விருந்து கொடுத்துள்ளார். காவல்துறை வட்டாரத்தில் இதுகுறித்து விசாரித்தபோது, "எழிலரசி மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. கடந்த 2020 டிசம்பர் மாதம் 31-ம் தேதி ராமுவின் மகன் ராஜேஷ் ராம் மற்றும் ராமுவின் மாமனார் செல்வராஜ் இருவரையும் மிரட்டி மதுபானக் கடையை எழுதி வாங்கிக் கொண்டதாக டி.ஆர்.பட்டிணம் காவல் நிலையத்தில் வழக்கு (குற்ற எண்: 138/2020) ஒன்று நிலுவையில் இருக்கிறது. அதில் எழிலரசி தேடப்படும் குற்றவாளியாகவும் இருக்கிறார்.

தலைமறைவாக இருக்கும் அவரைக் கைது செய்ய காவல்துறையினர் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இப்படிப்பட்ட ஒருவரை சமூகப் பொறுப்புடன் எங்களிடம்தான் ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால், அவரை பா.ஜ.க தங்கள் கட்சியில் இணைத்துக் கொண்டிருக்கிறது. போலீஸ் கெடுபிடிகளில் இருந்து தப்புவதற்காகத்தான் எழிலரசி தற்போது பா.ஜ.க-வில் இணைந்திருக்கிறார். அதனை புரிந்துகொண்டு அவரை பா.ஜ.க எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்” என்கின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-பாரூக்.

Comments