உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு!! அதிமுக ஆலோசனைக் கூட்டம்!!

 -MMH

  மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவிற்கு வருகை தரவுள்ள முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் மதுரை மேற்கு மாவட்டம் சார்பில் வரலாற்று சிறப்பு மிக்க வரவேற்பளிக்க வேண்டும் என வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அதிமுகவினரை கேட்டுக் கொண்டுள்ளார்.   

திருமங்கலத்தில் அதிமுக மேற்கு மாவட்டம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டச் செயலரும், வருவாய்துறை அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் தலைமை வகித்துப் பேசும் போது 'தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் அலங்காநல்லூரில் 16 ஆம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு விழாவை துவக்கி வைக்க வருகை தரவுள்ளார்கள்.

தமிழகத்தில் முதல்முறையாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவிற்கு நமது முதல்வர் வருகிறார். அவருக்கு மேற்கு மாவட்டம் சார்பில் வரலாற்று சிறப்பு மிக்க வரவேற்பளிக்க வேண்டும். இதேபோல 30 ஆம் தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதா கோயில் திறப்பு விழாவிற்கும் திருமங்கலம் வரவுள்ள முதல்வர், துணை முதல்வருக்கு 1 லட்சம் பேர் திரண்டு வந்து வரவேற்று விழாவில் பங்கேற்க வேண்டும். இதற்காக தற்போதிருந்தே சுவர்விளம்பரம் செய்து மக்களிடம் கோயில் திறப்பு விழாகுறித்து தெரிவித்து அவர்களையும் பங்கேற்க செய்ய வேண்டும்' என்றார். கூட்டத்தில் அவைத்தலைவர் அய்யப்பன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சரவணன், மாணிக்கம், நீதிபதி,  இளைஞரணி மாநில துணைச்செயலர் ஏ.கே.பி.சிவிசுப்பிரமணியன், ஜெ பேரவை மாவட்ட செயலர் தமிழழகன், அரசு வழக்குரைஞர் தமிழ்செல்வன், எம்.ஜி.ஆர் மன்ற துணைசெயலர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

- ராயல் ஹமீது.

Comments