பொதுமக்களின் தீர்வு தேடித்தரும் வகையில் காவல்துறையினர் இருக்க வேண்டும்!! - காவல்துறைத் தலைவர் பெரியய்யா!!

     -MMH

     பொதுமக்களின் பிரச்சினைகளுக்குக் காரணமாக இல்லாமல், தீர்வு தேடித்தரும் வகையில் காவல்துறையினர் இருக்க வேண்டும் என்று பொள்ளாச்சியில் நடைபெற்ற விழாவில் மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் பெரியய்யா கேட்டுக் கொண்டார்.

பொள்ளாச்சி உட்கோட்ட காவல் நிலையப் பகுதிகளில் உள்ள 51 கிராமங்களில் கிராம கண்காணிப்பு காவலர் அலுவலர் நியமனம் மற்றும் அறிமுக விழா பொள்ளாச்சியில் இன்று நடைபெற்றது, விழாவில் கலந்து கொண்ட மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் பெரியய்யா, கிராம கண்காணிப்பு காவல் அலுவலராக நியமிக்கப்பட்ட காவல்துறையினருக்கு நியமன ஆணைகளை வழங்கினார்

அதன்பின்னர் காவல்துறையினர் மத்தியில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா பேசியதாவது:-

கிராமப்புற மக்களுடன் இணைந்து குற்றங்களைத் தடுப்பதுடன் சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்து நல்ல சேவைகளை செய்து புதிதாக நியமனம் செய்யப்பட்ட கிராம கண்காணிப்பு காவல் அலுவலர்கள் நன் மதிப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பொது மக்களின் பிரச்சினைகளுக்குக் காரணமாக இல்லாமல், தீர்வு தேடித்தரும் வகையில் காவல்துறையினர் இருக்க வேண்டும். குற்றங்களைத் தடுத்து, குற்றங்களைக் கண்டுபிடித்து சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு நல்லபடியாக இருந்தால் மட்டுமே தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் மகிழ்ச்சியாக கொண்டாட முடியும். சில மாநிலங்கள் மற்றும் நாடுகளில் பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் வெளியே வர முடியாத சூழல் இருந்தாலும், தமிழகக் காவல்துறை சட்டம் ஒழுங்கை பாதுகாத்து உலகிலேயே மிகச்சிறந்த காவல்துறையான ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையாக இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார். விழாவில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு, பொள்ளாச்சி காவல்துறை துணை கண்காணிப்பாளர் சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments