சசிகலா காலுக்குள் எடப்பாடி! தவறாக பேசவில்லை - உதயநிதி..!

-MMH

சசிகலா குறித்து அவதூறாக ஒன்றும் பேசவில்லை, அதனால் மன்னிப்பு கேட்க மாட்டேன் என திமுக இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள திமுக பல்வேறு இடங்களில் மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறது. அந்த வகையில் கல்லக்குடியில் பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், "எடப்பாடி இல்ல அவர் டெட்பாடி; சசிகலா கால்ல அப்படி தானே விழுந்து கெடந்தாரு. டேபிள், சேர்குள்ளலாம் புகுந்து விழுந்து கெடந்தாரு; விட்டா அந்த அம்மா காலுக்குள்ளயே புகுந்துருப்பாரு" என்று சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியிருந்தார்.

இவரது பேச்சுக்கு டிடிவி.தினகரன், குஷ்பு உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் பெண்கள் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும், சசிகலா குறித்து அவதூறாகப் பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு திவாகரன் மகனும், அண்ணா திராவிடர் கழக இளைஞரணி செயலாளருமான ஜெய் ஆனந்த் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். உதயநிதி ஸ்டாலின் உடனடியாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், விழுப்புரம் மத்திய மாவட்டத்தில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், 2வது நாளாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது, அவர் பேசுகையில், "தமிழகத்தில் எடப்பாடி ஆட்சியில் கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்றுள்ளது. முதல்வரின் ஒரு டெண்டரில் ரூ.6600 கோடி ஊழல் நடந்துள்ளது. உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி எல்இடி பல்பு வாங்கியதில் ரூ.770 கோடி ஊழல் செய்துள்ளார். இப்படி ஒவ்வொரு அமைச்சர்களும் கோடிக்கணக்கில் ஊழலில் ஈடுபட்டுள்ளனர்.

இதையெல்லாம் மக்களிடத்தில் கொண்டு சென்று சேர்க்க வேண்டும். இவர்களிடம் இருந்து தமிழகத்தை மீட்டு விடிவு காலம் கொடுக்கவும், ஊழல்வாதிகளை தண்டிக்கவும் நீங்கள் தயாராக இருக்க வேண்டும். சசிகலா குறித்து அவதூறாக ஒன்றும் பேசவில்லை, அதனால் மன்னிப்பு கேட்க மாட்டேன்" என்றும் உதயநிதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-ராயல் ஹமீது, சிங்கம்புணரி.

Comments