கைதும், ரெய்டும்! பாஜகவால் மிரட்டப்படுகிறதா அதிமுக தலைமை...?

-MMH


கைதும், ரெய்டும்!  பாஜகவால் மிரட்டப்படுகிறதா அதிமுக தலைமை...? அதிமுக கூட்டணிக்குள் பூகம்பம் தொடங்குகிறதா?

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வலியுறுத்தி கடந்த சில மாதங்களுக்கு முன் நிர்வாகிகள், அமைச்சர்களை பன்னீர் செல்வத்திடம் பேச வைத்தார். ஒருவழியாக எதிர்ப்புகளை சமாளித்து முதல்வர் வேட்பாளரானார், எடப்பாடி பழனிசாமி.

வழக்கத்தை மீறும் பாஜக....! கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அதிமுக முதல்வர் வேட்பாளரை அறிவித்து சில மாதங்கள் ஆனபோதும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அது பற்றி வாய் திறக்கவில்லை. மக்களவைத் தேர்தலில் அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருந்தாலும், சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை பிரதான கட்சிகளில் ஒன்றான அதிமுக தலைமையில் கூட்டணி அமைவதே இதுவரை பின்பற்றப்பட்டு வந்த வழக்கம்.

டெல்லியை நோக்கி தமிழகத்தை திருப்ப முயற்சி....! கட்சி , ஆட்சி எதுவானாலும் தலைமை என்றால் அது டெல்லி என்ற நிலைமையை உருவாக்குவதே பாஜகவின் செயல் திட்டமாக இருக்கிறது. அதைத் தான் தற்போது செயல்படுத்தி வருகிறது. அதற்கு அதிமுக அமைச்சர்கள் சிலரே துணை போவதுதான் வேடிக்கை என்கின்றனர். முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொண்ட அவர்கள் தற்போது அதை தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைமை தான் அறிவிக்கும் என்று கூறுகின்றனர்.

அதிமுக போட்டியிடும் தொகுதிகள் எத்தனை....? ரஜினிகாந்த் கட்சி தொடங்கும் முடிவை கைவிட்ட நிலையில் பாஜகவுக்கு அதிமுகவைத் தவிர வேறு வழியில்லை என்று கூறப்படுகிறது. அதனால் இந்த கூட்டணியில் அதிகமான சீட்டுகளை கேட்டுப் பெறுவதில் முனைப்பு காட்டுகிறது. அதற்கு அதிமுக தலைமை பிடி கொடுப்பதாக தெரியவில்லை. அமித் ஷா சென்னை வந்த போது 60 தொகுதிகளைக் கேட்டதாக கூறப்பட்டது. தமிழகத்தில் வாக்கு வங்கி இல்லாத பாஜகவுக்கே 60 தொகுதிகளை ஒதுக்கினால், பாமக, தேமுதிக உள்ளிட்ட பிற கட்சிகள் எத்தனை சீட்டுகளை கேட்கும், பின் அதிமுக இரட்டை இலக்க எண்ணிக்கையில் தான் போட்டியிடும் நிலைமை உருவாகும் என அக்கட்சி தலைமை மறுத்தது.

எடப்பாடிக்கு மிரட்டலா....? பின்னர் பாஜக சார்பில் 38 தொகுதிகளை கேட்டுள்ளதாகவும் அதற்கான வேட்பாளர்களின் பெயர் பட்டியல் வெளியானது. இதற்கும் அதிமுக தரப்பில் சம்மதம் வரவில்லை. இதனாலே முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை பாஜக ஏற்றுக்கொள்ள தயக்கம் காட்டுகிறது. ஓபிஎஸ் என்றால் பாஜகவின் சொல்லுக்கு கட்டுப்படுவார் என்றும் கருதப்படுகிறது. இந்த நிலையில் அதிமுக தலைமையை தங்கள் முடிவுக்கு கட்டுப்படவைக்க மறைமுகமாக சில மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

கைதும், ரெய்டும் இரு கண்கள்...! தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தற்போது நடைபெற்று வரும் கைது நடவடிக்கை பாஜகவின் மிரட்டலின் ஒரு பகுதிதான் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். மேலும் அதிமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் பாஜக கைவசம் இருப்பதாக கூறப்படுகிறது. அமைச்சர்களுக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் வருமானவரித்துறை சோதனையும் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிமுகவுக்கு மறைமுகமாக கொடுக்கப்படும் இந்த அழுத்தமும், மிரட்டலும் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தத் தான் என்கிறார்கள்.

தூசி தட்டப்படும் வழக்குகள்....! கூட்டணி குறித்தும் முதல்வர் வேட்பாளர் குறித்தும் ஓரிரு தினங்களில் அறிவிக்கப்படும் என கூறிவந்த பாஜகவினர் மூன்று நாள்களாகியும் மௌனம் சாதித்து வருகின்றனர். பாஜகவின் கோரிக்கைகளுக்கு அதிமுக செவி சாய்க்க மறுத்தால் மேலும் சில வழக்குகள் தூசி தட்டப்படும் என்றும், வருமான வரித் துறை ரெய்டு அதிகரிக்கப்படும் என்றும் கூறுகிறார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-பாரூக்.

Comments