இன்சூரன்ஸ் கட்டாத காரில் பிரச்சாரம்!! சிக்கலில் கமலஹாசன்!!

                -MMH

கமல் ஹாசன் தனது காருக்கு இன்சூரன்ஸ் கட்டாத நிலையில் அதில் பிரச்சாரம் பயணம் மேற்கொண்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அடுத்த சில மாதங்களில் வரவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் மாற்று சக்தியாக விளங்கும் என்ற நம்பிக்கையில் அக்கட்சி தலைவர் கமல் ஹாசன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். முன்னதாக ரஜினியின் அரசியல் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்த கமலுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது. அதேசமயம் தனக்கு ஆதரவளிக்குமாறு ரஜினியை சந்தித்து கோரிக்கை வைப்பேன் என்று கமல் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் மூன்றாவது அணி அமைந்தால் அதன் முதல்வர் வேட்பாளராக இருப்பேன் என்றும் கமல் ஹாசன் கூறியுள்ளார்.

ஆனால் அதிமுக, திமுக தலைமையிலான கூட்டணிக்கு எதிராக வலுவான அணியை கட்டமைக்க முடியுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. அப்படியே மூன்றாவது அணி அமைந்தாலும் கடந்த மக்களவை தேர்தலில் கிடைத்த வாக்கு வங்கியைத்தான் தக்க வைத்துக் கொள்வர். ஆட்சி அமைக்கும் அளவிற்கான பெரும்பானையை பெறுவது நடக்காத காரியம் என்று கூறப்படுகிறது. ஏனெனில் ரஜினி அரசியல் கட்சி தொடங்காமல் பின் வாங்கியது புதிய அரசியல் கணக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.

இருப்பினும் அவரது ஆதரவுக்குரல் யாருக்கானது என்ற எதிர்பார்ப்பு நிலவுவதால் தமிழக அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. இந்த சூழலில் ’சீரமைப்போம் தமிழகத்தை’ என்ற பெயரில் கமல்ஹாசன் தனது பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளார். ஊழல் கறை படிந்த அதிமுக என்ற குற்றச்சாட்டை அனைத்து பிரச்சாரக் கூட்டங்களிலும் பிரதானமாக குறிப்பிட்டு பேசி வருகிறார். இருபெரும் திராவிடக் கட்சிகளால் தமிழகம் சீரழிந்து கிடப்பதாக குற்றம்சாட்டும் கமல், தனது கட்சியும் ஒரு திராவிடக் கட்சிதான் என்று தெரிவித்திருப்பது கவனிக்கத்தக்கது.


இந்நிலையில் கமல் ஹாசன் பிரச்சாரம் செய்து வரும் Lexus காரின் இன்சூரன்ஸ் கடந்த மார்ச் 6ஆம் தேதியே முடிந்திருக்கிறது. அதன்பிறகு இன்சூரன்ஸை புதுப்பிக்காமல் இருக்கின்றனர்.

கொரோனா காலத்தில் வாகனங்களுக்கான இன்சூரன்ஸை புதுப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டிருந்தாலும்கூட, தற்போது அலுவலகங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வரும் நிலையில், ஒரு அரசியல் கட்சியின் தலைவர், தனது வாகனத்திற்கான இன்சூரன்ஸை புதுப்பிக்காமல் அதே வாகனத்திலேயே பிரச்சாரத்தை செய்து கொண்டிருப்பது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.

இதுதொடர்பான ஆவணங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, கமலை விமர்சனத்திற்கு ஆளாக்கி வருகின்றனர். அதாவது, நேர்மையுடன் வருகிறேன் என்று சொல்பவர் ஏன் விதிகளை கடைபிடிப்பதில்லை என்று கேள்வி எழுப்புகின்றனர். இப்படி இருந்தால் தமிழகத்தை எப்படி சீரமைப்பீர்கள். அந்த சீரமைப்பை உங்களிடம் இருந்துதானே தொடங்க வேண்டும் என்றும் விமர்சனம் செய்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

- ராயல் ஹமீது, சிங்கம்புணரி.

Comments