மத நல்லிணக்கம் தழைத்தோங்கும் மேலூர்!

      -MMH

     மதுரை மாவட்டம், மேலூர் நகராட்சியில் அனைத்து சமூக மக்களும் அண்ணன் - தம்பி, மாமன் - மச்சான் உறவுகளோடு நீண்ட நெடுங்காலமாக வாழ்ந்து வருகின்றனர். இங்கு பல்வேறு தொழுகைப் பள்ளிவாசல்களும், பல கோவில்களும், தேவாலயங்களும் இருக்கின்றன.


இவற்றிற்கு முத்தாய்ப்பாக பெரிய பள்ளிவாசல் மற்றும் சிவன் கோவிலும் இருந்தாலும், அனைத்து சமூக மக்களையும் ஒருங்கிணைக்கும் பாலமாக 'கொன்னை மஸ்தான் தர்கா' மிக முக்கிய பங்காற்றி வருகின்றது. இந்த தர்காவின் சந்தன கூடு திருவிழாவில் அனைத்து சமூகத்தவருக்கும் உரிய பிரநிதித்துவம் தரப்படும் வகையில் பண்டைய காலந்தொட்டே விழாவினை முன்னோர்கள் வடிவமைத்து வைத்திருப்பதை சுற்றுவட்டார மக்கள் சிலாகித்து பேசிவருகின்றனர். 

இந்நிலையில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வருடாவருடம் மாலைபோட்டு, விரதம் இருந்து கார்த்திகை மாதங்களில் சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள், இந்த கொன்னை மஸ்தான் தர்காவில் வழிபாடு நடத்தி பாத்திகா ஓதிவிட்டு சர்க்கரை வாங்கி பங்கிட்டுச் செல்லும் நடைமுறையும் இருந்து வருவது, இரு சமூகத்தாரிடையே பிணைப்பை உருவாக்கி, மத நல்லிணக்கம் தளைத்தோங்கச் செய்கின்றது. 


பெரியாரிய, திராவிட இயக்கங்களின் தொடர் செயல்பாடுகளும், திமுக, அதிமுக மற்றும் அமமுக போன்ற அரசியல் கட்சிகளின் அசுர பலங்களும், இதுபோன்ற நல்லிணக்க விழாக்களும் இப்பகுதி மக்களிடையே நிலவும் பிணைப்பை யாராலும் பிரிக்க இயலாது என்றே நமது கள ஆய்வு கூறுகின்றது.

- பாரூக், சிவகங்கை.

Comments