தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க பெற்றோர்கள் கோரிக்கை!!
தமிழகத்தில் குறைந்தது இரண்டு மாதங்களாவது 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறந்து நேரடி வகுப்புகளை நடத்த வேண்டும் எனத் திட்டமிடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக பெற்றோர்களும், பள்ளி நிர்வாகிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்படுகிறது. ஊரடங்கில் வழங்கப்பட்டு உள்ள அதிகப்படியான தளர்வுகள் காரணமாக, பொதுமக்களும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். மேலும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களும் அனைத்து ஆண்டு மாணவர்களுக்கும் முழுவதுமாக திறக்கப்பட்டு உள்ளன. மேலும் பள்ளி, கல்லூரிகளில் கொரோனா பரவலும் உறுதி செய்யப்படவில்லை. நோய்த்தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் முழுவதுமாக பின்பற்றப்படுகிறது.
மேலும் நடப்பு கல்வியாண்டு இன்னும் 3 மாதங்களில் முடிவடைய உள்ளது. தற்போதைக்கு 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் ஒரு நாள் கூட நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ளவில்லை. இதனால் மாணவர்கள் உளவியல் ரீதியாக சில பாதிப்புகளை சந்திக்க நேரும். எனவே குறைந்தபட்சம் 2 மாதங்களாவது அவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.
இதே கோரிக்கையை பெற்றோர்களும், பள்ளி நிர்வாகிகளும் முன்வைக்கின்றனர். 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் கல்வி மீதான ஈடுபாட்டை அதிகரிக்க நேரடி வகுப்புகளில் ஈடுபடுத்தி உற்சாகப்படுத்த வேண்டும். அதுமட்டுமின்றி வரும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை விடுமுறை விடப்பட உள்ளது. எனவே அதற்கு முன்பாக பள்ளிகளைத் திறந்து நேரடி வகுப்புகளை நடத்த வேண்டும். இதுவே ஆசிரியர்களின் விருப்பமாகவும் உள்ளது.
இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் வழங்கினால் மட்டுமே அதிகளவிலான மாணவர்களை அமர வைக்க இயலும். எனவே இது தொடர்பாக சுகாதாரத்துறையிடம் ஒப்புதல் பெறப்பட்டு முதல்வர் அவர்களின் அனுமதியுடன் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
-Ln. இந்திராதேவி முருகேசன், சோலை, ஜெய்க்குமார்.
Comments